மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம் + "||" + The siege struggle of the disabled

மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்
கோரிக்கை மனுக்கள் வாங்க அதிகாரி இல்லாததால் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத் திறனாளிகள் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குன்னம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்ட மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அரசாணையை கண்டித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் உடல் குறைபாடு தன்மைக்கேற்ப வேலை ஒதுக்கப்படாமலும், முழுமையாக 100 நாட்கள் வேலை கொடுக்கப்படாமலும் இருக்கிற நிலையை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத் திறனாளிக்கு முழுமையாக 100 நாள் வேலை வழங்க வேண்டும். 4 மணிநேர பணியும், முழுநேரக தினக்கூலி ரூ.273-ஐ குறைக்காமல் வழங்கிட வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வேலை அட்டை வழங்கிட வேண்டும். மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் உதவித்தொகை வழங்கிட வேண்டும். வீடு, வீட்டுமனை, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து சமூகநல திட்டத்திலும் 5 சதவீதம் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குன்னம் வட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று வேப்பூர் ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 
அதிகாரிகள் இல்லை
அதன்படி வேப்பூர் ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் பேசினார். பின்னர் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அதிகாரிகளிடம் மனு கொடுப்பதற்காக ஒன்றிய அலுவலகத்திற்கு உள்ளே சென்றனர். அங்கு வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அங்கிருந்த மற்ற அலுவலர்களும் மனுக்களை வாங்க முன் வரவில்லை என்று கூறப்படுகிறது.
ஆகையால், ஆத்திரம் அடைந்த மாற்றுத் திறனாளிகள் ஒன்றிய அலுவலக வராண்டாவில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களை மாற்றுத் திறனாளிகள் என்று கூட பாராமல் கோரிக்கை மனுக்களை வாங்க மறுத்த அலுவலர்களை கண்டித்தும், கோரிக்கை மனுக்களை வாங்க அதிகாரிகள் வரும்வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கோஷமிட்டனர்.
 பின்னர் மாலை 3 மணி அளவில் வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் வந்து அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டதோடு கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.