மொடக்குறிச்சி அருகே பரபரப்பு கோவிலுக்குள் புகுந்து பூசாரியிடம் தங்கசங்கிலி பறிப்பு; மர்மநபர்கள் 2 பேருக்கு வலைவீச்சு


மொடக்குறிச்சி அருகே பரபரப்பு கோவிலுக்குள் புகுந்து பூசாரியிடம் தங்கசங்கிலி பறிப்பு; மர்மநபர்கள் 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 Oct 2021 1:35 AM IST (Updated: 14 Oct 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

மொடக்குறிச்சி அருகே கோவிலுக்குள் புகுந்து பூசாரியிடம் 3 பவுன் தங்கசங்கிலியை பறித்துச்சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி அருகே கோவிலுக்குள் புகுந்து பூசாரியிடம் 3 பவுன் தங்கசங்கிலியை பறித்துச்சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மர்மநபர்கள்
மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி மாரியம்மன் கோவில் வீதியில் வசித்து வருபவர் சரவணன் மாணிக்கம் (வயது 50). இவர் நஞ்சை ஊத்துக்குளி அருகே சாத்தம்பூர் பகுதியில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள வள்ளாள ஈஸ்வரன் கோவில் பூசாரியாக உள்ளார். சரவணன் மாணிக்கம் நேற்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு சென்று சாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து கொண்டிருந்தார்.
அப்போது கோவிலில் வேறு யாரும் இல்லை. இந்த நிலையில் பகல் 11 மணி அளவில் முக கவசம் அணிந்துக்கொண்டு 2 மர்மநபர்கள் மோட்டார்சைக்கிளில் கோவில் முன்பு வந்து இறங்கினர். அவர்கள் 2 பேருக்கும் சுமார் 30 வயது இருக்கும்.
தங்கசங்கிலி பறிப்பு
பின்னர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் திடீரென அங்கிருந்த பூசாரி சரவணன் மாணிக்கம் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். அதன்பின்னர் கோவில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளில் ஏறி 2 பேரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பித்து சென்றனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்தகுமார், மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவிலுக்குள் புகுந்து பூசாரியிடம் தங்க சங்கிலி பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story