கடையின் பூட்டை உடைத்து ரூ.4½ லட்சம் செல்போன்கள் கொள்ளை
குளச்சலில் கடையின் பூட்டை உடைத்து ரூ.4½ லட்சம் மதிப்பிலான செல்போன்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். மற்றொரு கடையில் கைவரிசை முயற்சி நடந்துள்ளது.
குளச்சல்:
குளச்சலில் கடையின் பூட்டை உடைத்து ரூ.4½ லட்சம் மதிப்பிலான செல்போன்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். மற்றொரு கடையில் கைவரிசை முயற்சி நடந்துள்ளது.
இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பூட்டை உடைத்து...
குமரி மாவட்டம் குளச்சலில் உள்ள சாஸ்தான் கரையை சேர்ந்தவர் பக்ருதீன் (வயது 36). இவர் குளச்சல் பீச்ரோட்டில் செல்போன் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு வழக்கம் போல் இவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலையில் பக்ருதீன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
ரூ.4½ லட்சம் கொள்ளை
உடனே பக்ருதீன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அங்கு கடையில் இருந்த ரூ.4½ லட்சம் மதிப்பிலான செல்போன்களை காணாததால் அதிர்ச்சி அடைந்தார்.மேலும் இதுபற்றி தகவல் அறிந்த குளச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து செல்போன்கள் கொள்ளை நடந்த கடையில் விசாரணை நடத்தினர். இரவில் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டியது தெரிய வந்தது.
இதனையடுத்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். அதே சமயத்தில் கொள்ளையர்கள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளார்களா? என்பது தொடர்பாகவும் போலீசார் ஆய்வு செய்தனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் குளச்சல் இரும்பிலி சந்திப்பில் ரீத்தாபுரத்தை சேர்ந்த ரவி (21) என்பவர் செல்போன் கடையிலும் கைவரிசை காட்ட மர்மநபர்கள் முயன்றுள்ளனர். அந்த கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்குள்ள செல்போன்கள் கொள்ளைபோகவில்லை.
ஆனால் உடைக்கப்பட்ட பூட்டு அந்த கடையின் அருகே வீசப்பட்டு கிடந்தது. இதனை போலீசார் கைப்பற்றினர்.
கடையின் பூட்டை உடைத்த மர்மநபர்களால், கதவை திறக்க முடியாததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு சென்றிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.இந்த 2 சம்பவங்கள் குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். கடையின் பூட்டை உடைத்து ரூ.4½ லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story