தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த 1¾ வயது குழந்தை சாவு
பூதப்பாண்டி அருகே தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த 1¾ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி அருகே தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த 1¾ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
1¾ வயது குழந்தை
பூதப்பாண்டி அருகே உள்ள இறச்சகுளம் பாரதி தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி அஜிதா. இவர்களுக்கு 1¾ வயதில் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் இருந்தன. இதில் ஆண் குழந்தையின் பெயர் ஜெயதேவ்.
இந்தநிலையில் நேற்று காலையில் அஜிதா வீட்டில் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது குழந்தை ஜெயதேவ் குளியல் அறையில் வாளியில் தண்ணீர் ஊற்றி விளையாடி கொண்டிருந்ததாக தெரிகிறது.
சிறிது நேரம் கடந்து அஜிதா குழந்தையை தேட தொடங்கினார். வீட்டின் பல இடங்களில் தேடியும் குழந்தையை காணவில்லை.
பரிதாப சாவு
பின்னர் வீட்டில் உள்ள குளியல் அறையில் சென்று பார்த்த போது அங்கு பிளாஸ்டிக் வாளியில் இருந்த தண்ணீரில் மூழ்கிய நிலையில் ஜெயதேவ் அசைவற்ற நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். விளையாடி கொண்டிருந்த குழந்தை தவறி வாளிக்குள் விழுந்தது தெரிய வந்தது.
உடனே அஜிதா அலறியடித்துக்கொண்டு சத்தம் போட்ட நிலையில் குழந்தையை தூக்கி வாரி அணைத்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் விரைந்து வந்தனர். அவர்களின் உதவியுடன் குழந்தையை பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story