டீக்கடை ஊழியர் கொலை


டீக்கடை ஊழியர் கொலை
x
தினத்தந்தி 15 Oct 2021 6:43 PM IST (Updated: 15 Oct 2021 6:43 PM IST)
t-max-icont-min-icon

பல்லடத்தில் கடைக்குள் புகுந்து திருடியவர்களை பிடிக்க முயன்றபோது கத்தியால் குத்தப்பட்ட டீக்கடை ஊழியர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக ஒரு கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

பல்லடம்,அக்.16-
பல்லடத்தில் கடைக்குள் புகுந்து திருடியவர்களை பிடிக்க முயன்றபோது கத்தியால் குத்தப்பட்ட டீக்கடை ஊழியர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக ஒரு கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். மற்றொருவனை போலீசார் தேடி வருகின்றனர். 
 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
கத்திக்குத்து
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி வயது 47. இவர் பல்லடம் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள தனது அண்ணன் ராமசாமியின் டீக்கடையில்  வேலை பார்த்து வந்தார். இவர் டீக்கடையில் வேலை முடிந்து இரவில் அருகில் உள்ள மரக்கடையில் காவலாளி குமரசாமி என்பவருடன் தூங்குவது வழக்கம்.
 இந்த நிலையில் கடந்த 3ந்தேதி கொள்ளையர்கள் 2 பேர் மரக் கடைக்குள் புகுந்து அங்கிருந்த  ரூ.1,500 திருடிவிட்டு தப்ப முயன்றனர். இதை பார்த்து திடுக்கிட்டு எழுந்த சுப்பிரமணியும், குமாரசாமியும் அந்த கொள்ளையர்களை பிடிக்க  முயன்றனர். அப்போது சுப்பிரமணியை கொள்ளையர்கள் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். 
கொலை வழக்குப்பதிவு 
இதையடுத்து அருகில் உள்ளவர்கள சுப்பிரமணியை மீட்டு  பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக  திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மரக்கடை உரிமையாளர் ராஜேந்திரன் பல்லடம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். 
இந்த நிலையில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து பல்லடம் போலீசார், இந்த திருட்டு வழக்கை, கொலை வழக்காக, மாற்றி  தீவிர விசாரணை செய்து வந்தனர்.
ஒருவர் கைது
இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்த அழகர்சாமி வயது 22, என்பவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவனை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். 
வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொருவனை போலீசார் தேடி வருகின்றனர்.

----

Next Story