‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகார் பெட்டி செய்தி எதிரொலி
தெ ன்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்தவர் கே.திருக்குமரன். இவர், கடையத்தில் அம்பை-தென்காசி மெயின் ரோட்டில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்வதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு கடந்த 13-ந் தேதி செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக குடிநீர் குழாய் உடைப்பு உடனடியாக சீரமைக்கப்பட்டது. இதற்கு உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அவர் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
சுகாதார சீர்கேடு
நெல்லை மாவட்டம் பணகுடி நகரப்பஞ்சாயத்து 1-வது வார்டு பாம்பன்குளத்தில் உள்ள குடிநீர் தொட்டியின் அருகே குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் காற்றில் குப்பைகள் பறந்து அந்த தெருக்களில் உள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது. மேலும் குடிநீர் தொட்டியின் அருகே அசுத்தமும் செய்யப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தின் அருகில் தான் பள்ளிக்கூட வாகனங்கள் குழந்தைகளை ஏற்றிச்செல்வது வழக்கம். தொடக்கப் பள்ளிக்கூடம் திறக்கப்பட இருக்கும் நிலையில் அந்த இடத்தை தூய்மைப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அங்கு குப்பைகளை கொட்டாதவாறு எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.
வே.சிவபாரதி, பாம்பன்குளம்.
நாய் தொல்லை
நெல்லை பழைய பேட்டை அனவரத சுந்தர விநாயகர் கோவில் வடக்கு தெருவில் நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. அவை கூட்டமாக சுற்றி வருவதால், அந்த வழியாக குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் மிகவும் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. எனவே, தெரு நாய்களை பிடிக்க மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாகுல் அமீது, பழைய பேட்டை.
தெருவிளக்கு எரியுமா?
வீரவநல்லூர் ரெங்கநாத சாமி சன்னதி தெருவில் உள்ள மின்கம்பத்தில் மின்விளக்கு கடந்த 6 மாதங்களாக சரிவர எரிவதில்லை. இதனால் இருள் சூழ்ந்து இருப்பதால் வயதானவர்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, தெருவிளக்கு எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ராஜேந்திரன், வீரவநல்லூர்.
பஸ் வசதி வேண்டும்
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் பெரிய கிராமத்திற்கு போதுமான பஸ் வசதி கிடையாது. மருக்கலாங்குளத்தில் இருந்து தங்கம்மாள்புரம், குறிஞ்சாக்குளம், கீழக்கலங்கல், மேலக்கலங்கல், குறிச்சான்பட்டி வழியாக சுரண்டைக்கும், பாபநாசம், ஆலங்குளம், தென்காசி ஊர்களில் இருந்து ஊத்துமலை, குறிஞ்சாக்குளம் வழியாக வரும் 4 பஸ்களும் வரிசையாக சங்கரன்கோவில் செல்கிறது. இதில் ஏதாவது இரண்டு பஸ்களை கீழக்கலங்கல் கிராமத்துக்கு மதிய வேளையில் வந்து சங்கரன்கோவிலுக்கு செல்லுமாறு இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
என்.டி.டெக்கான், கீழக்கலங்கல்.
குடிநீர் குழாயில் உடைப்பு
தென்காசி மாவட்டம் குருவிகுளம் யூனியன் வெங்கடாசலபுரத்தில் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்துக்கு எதிர்புறம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வீணாக செல்கிறது. எனவே, உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
பவித்ரன், வெங்கடாச்சலபுரம்.
உயர்கோபுர மின்விளக்கு எரியவில்லை
சிவகிரி பஸ்நிலையம் முன்பு அமைந்துள்ள உயர்கோபுர மின்விளக்்கு கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக எரியவில்லை. இதேபோல் தேவர் சிலை முன்பு மற்றும் சிவகிரி பஜார் பகுதியிலும் உள்ள உயர்கோபுர மின்விளக்குகளும் எரியவில்லை. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
முனியசாமி, சிவகிரி.
குடிநீர் வினியோகம்
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சியில் உள்ள கீழ நெய்னார் தெருவில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக சரியாக குடிநீர் வருவதில்லை. இதனால் மக்கள் மிகவும் அவதிப்படுகிறாார்கள். எனவே,, குடிநீர் சீராக வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ஏ.கே.பி.அஸ்ஹாப், காயல்பட்டினம்.
பெண் டாக்டர் நியமிக்கப்படுவாரா?
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட லூர்தம்மாள்புரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அதில் பெண்கள் அதிகமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். ஆனால் அங்கு ஒரேயொரு ஆண் டாக்டர் மட்டும் தான் உள்ளார். எனவே, பெண் டாக்டரை நியமிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஆலன் ஜோஸ்வா, மேல அலங்காரதட்டு.
Related Tags :
Next Story