லாரியை சிறை பிடித்த பொதுமக்கள்


லாரியை சிறை பிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 15 Oct 2021 7:03 PM IST (Updated: 15 Oct 2021 7:03 PM IST)
t-max-icont-min-icon

குடிமங்கலம் அருகே கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தோல் கழிவுகளை கொட்ட முயன்ற லாரியை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது

குடிமங்கலம், அக்.16-
குடிமங்கலம் அருகே கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தோல் கழிவுகளை கொட்ட முயன்ற லாரியை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த லாரி உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 
லாரி சிறை பிடிப்பு 
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு இறைச்சிக்காக மாடுகள் மற்றும் காய்கறிகள் லாரிகளில் தினமும் கொண்டு செல்லப்படுகிறது. தமிழகத்தில் தாராபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறிகள் அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது. கேரளாவில் சரக்குகளை இறக்கிவிட்டு வரும்போது மருத்துவகழிவுகள் மற்றும் தோல் கழிவுகளை கொண்டுவந்து எல்லையோர கிராமங்களில் கொட்டுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கேரள மாநிலம் கஞ்சிக்கோடு பகுதியிலிருந்து தோல் கழிவுகளை ஏற்றி வந்து பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் இருந்து பெதப்பம்பட்டி உடுமலை செல்லும் சாலையில் பொட்டிநாயக்கனூர் பிரிவு அருகே ரோட்டோரத்தில் கொட்டியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி பொது மக்கள் விரைந்துசென்று அந்த லாரியை சிறை பிடித்தனர். மேலும் ஊராட்சி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
ரூ.10 ஆயிரம் அபராதம்
ஊராட்சி நிர்வாகத்தினர் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் லாரி காரைக்குடியை சேர்ந்த கோபால் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. விசாரணையில் கேரளாவிற்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்று இறக்கிவிட்டு வரும் போது கஞ்சிக்கோடு பகுதியில் தோல்கழிவுகளை ஏற்றி வந்ததும் லாரியை ஹக்கீம் என்பவர் ஓட்டி வந்ததும் தெரியவந்தது. 
இதையடுத்து கேரள தோல் கழிவுகளை சோமவாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கொட்ட முயன்றதற்காக லாரி உரிமையாளருக்கு ஊராட்சியின் சார்பில் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.பொட்டி நாயக்கனூர்பிரிவில் கொட்டப்பட்ட கழிவுகள் மீண்டும் லாரியில் ஏற்றப்பட்டு கேரளாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story