மழை வேண்டி கிராம மக்கள் நூதன வழிபாடு
எட்டயபுரம் அருகே மழை வேண்டி, கிராம மக்கள் நூதன வழிபாடு நடத்தினர்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே மழை பெய்யாததால் ஒப்பாரி வைத்தும், கொடும்பாவி எரித்தும் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் நூதன வழிபாடு நடத்தினர்.
மூன்றுமுறை விதைப்பு
எட்டயபுரம் பகுதியில் மானாவாரி நிலங்களில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெங்காயம், மிளகாய் போன்ற பல்வேறு பயிர்கள் ஆவணி மாதம் கடைசி வாரத்தில் இருந்து பயிரிட்டனர். ஆரம்பத்தில் மழைக்கான அறிகுறி தென்பட்டது. இதனை தொடர்ந்து, அடுத்தடுத்து விவசாய பணியில் ஈடுபட்டனர்.
விதைப்பு செய்து ஒரு மாத காலமாக மழை பெய்யாததால் மண்ணில் விதைக்கப்பட்ட விதைகள் வீணாகி விட்டன. இதனை தொடர்ந்து, 15 நாட்களுக்கு முன் மீண்டும் விதைத்தனர். அதன் பின்னரும் மழை பெய்யவில்லை. இதனால் மூன்று முறை விதைப்பு செய்தும் முத்துலாபுரம் குறுவட்டத்தில் உள்ள கருப்பூர், அயன்வடமலாபுரம், தாப்பாத்தி, கோட்டூர், மாசார்பட்டி, மாவில்பட்டி போன்ற பல்வேறு கிராமங்களில் மழை பெய்யவில்லை. இதனால் விதைக்க, உரமிட, உழுதல் வகைக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவாகிவிட்டது. மழை பொய்த்து வருவதால் விவசாயிகள் மழைக்கஞ்சி, பொங்கல் வழிபாடு, கிராம எல்கையில் ஆடு பலியிடுதல், கொடும்பாவி எரித்தல் போன்ற நூதன வழிபாடுகளை செய்து வருகின்றனர்.
நூதன வழிபாடு
இந்நிலையில், எட்டயபுரம் அருகே மாவில்பட்டி கிராமத்தில் மழை வேண்டி கொடும்பாவியை தெருக்களில் இழுத்து வந்து விவசாயிகள் ஒப்பாரி வைத்து, கிராம முச்சந்தியில் தீ வைத்து எரித்து, நூதன முறையில் மழை வேண்டிய வழிபாடு நடத்தினர்.
இந்த வழிபாடு நிகழ்ச்சியில், பஞ்சாயத்து, தலைவர் எல்லப்பன், கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் மற்றும் நூற்றுக்கணக்கான பெண்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு மழை பெய்து விவசாயம் பாதிக்கப்பட்டதாகவும், இந்தாண்டு மழையில்லமால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story