மருமகள் நகைகளை திருடிவிட்டு, நாடகமாடிய மாமியார் கைது


மருமகள் நகைகளை திருடிவிட்டு, நாடகமாடிய மாமியார் கைது
x
தினத்தந்தி 15 Oct 2021 7:58 PM IST (Updated: 15 Oct 2021 7:58 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மருமகள் நகைகளை திருடிவிட்டு, நாடகமாடிய மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மருமகள் நகைகளை திருடிவிட்டு நாடகமாடிய மாமியார் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. 

கரடி வேடம் அணிந்த மர்மநபர்கள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஆவுடையம்மாள்புரத்தை சேர்ந்தவர் மாடசாமி மனைவி பார்வதியம்மாள் (வயது 55). மாடசாமி இறந்து விட்டதால், பார்வதியம்மாள் தனது மகன் ராமகிருஷ்ணன், மருமகள் இசக்கியம்மாள் ஆகியோருடன் வசித்து வருகிறார். ராமகிருஷ்ணனுக்கு மாதேஷ் (7), கன்ஷீகா (3) என்று 2 பிள்ளைகள் உள்ளனர். 
இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி நள்ளிரவில் பார்வதியம்மாள், அதே பகுதியில் வசிக்கும் தனது சகோதரி மகள் கணபதியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், கரடி வேடம் அணிந்த 2 மர்மநபர்கள் தனது வாயில் துணி ஒன்றை வைத்தனர். அதன்பிறகு எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. கண் விழித்து பார்த்தபோது பக்கத்து வீட்டுக்கு அருகில் கயிற்றால் கட்டிப் போடப்பட்டு கிடக்கிறேன் என்று கூறினார்.

நகைகள் மாயம்

இதனால் அதிர்ச்சி அடைந்த கணபதி அங்கு வந்து பார்த்தபோது, பார்வதியம்மாள் கயிற்றால் கட்டப்பட்டு கிடந்தார். உடனே அவர் கயிற்றை அவிழ்த்து பார்வதியம்மாளை விடுவித்தார். அதன்பிறகு பார்வதியம்மாள், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது மகன் ராமகிருஷ்ணன், மருமகள் இசக்கியம்மாள் ஆகிேயாரை எழுப்பி, மர்மநபர்கள் தன்னை கட்டிப்போட்டு சென்று விட்டதாக கூறி பீரோவில் உள்ள நகைகள் மற்றும் பொருட்களை சரிபார்க்கும்படி தெரிவித்தார்.
அப்போது ஒரு பீரோவில் இருந்த இசக்கியம்மாளின் 6 பவுன் நகைகள் மட்டும் காணாமல் போய் இருந்தது. ஆனால் மற்றொரு பீரோவில் இருந்த பார்வதியம்மாளின் நகைகள் அப்படியே இருந்தது தெரியவந்தது. 

போலீசார் விசாரணை

இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் மேற்பார்வையில், நாலாட்டின்புத்தூர் இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையிலான போலீசார் ஆவுடையம்மாள்புரத்துக்கு சென்று பார்வதியம்மாள் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பார்வதியம்மாள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததால் அவர் மீது ேபாலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஊருக்குள் புதிதாக யாரும் வரவில்லை என்பது தெரியவந்து. 
எனவே, உள்ளூரை சேர்ந்த யாராவது நகைகளை எடுத்திருக்க வேண்டும் அல்லது பார்வதியம்மாள் நகைகளை திருடிவிட்டு நாடகமாட வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். 

நகைகள் மீட்பு

பார்வதியம்மாள் திருடர்கள் வந்ததாக கூறிய பகுதியில் சோதனை நடத்தியபோது, அங்குள்ள முட்புதரில் ஒரு தாளில் நகைகள் பொதிந்த நிலையில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதை கைப்பற்றிய போலீசார் பார்வதியம்மாளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், அவரே நகைகளை திருடி மறைத்து வைத்து விட்டு, கரடி வேடமணிந்த திருடர்கள் வந்து கைவரிசை காட்டியது போன்று நாடகமாடிய பரபரப்பு தகவல் அம்பலமானது. 
பார்வதியம்மாளின் தம்பி வரதராஜ் அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் தனது குடும்பம் மிகுந்த கஷ்டத்தில் இருப்பதாக பார்வதியம்மாளிடம் கூறியுள்ளார். இதையடுத்து பார்வதியம்மாள் தனது வீட்டில் உள்ள மருமகள் நகைகளை எடுத்து தருவதாகவும், அதை வைத்து குடும்ப கஷ்டத்தை தீர்த்து கொள்ளுமாறும் வரதராஜிடம் கூறி உள்ளார். மேலும் மருமகளிடம் நகைகளை கேட்டால் தரமாட்டாள், எனவே, நகைகளை எடுத்து ஒளித்து வைத்துக்கொண்டு திருடு போய்விட்டது என்று கூறிவிடலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மாமியார் கைது

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பார்வதியம்மாளை கைது செய்தனர். மேலும் வரதராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, இந்த புகார் குறித்து விசாரணை தொடங்கியதுமே பார்வதியம்மாள் கூறுவது அத்தனையும் பொய் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. இருப்பினும் நகைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காகவே அவர் கூறியதை நம்புவது போன்று நடித்து விசாரணை நடத்தினோம். பார்வதியம்மாளை கட்டிப்போட்டதாக கூறப்படும் திருடர்கள் அவரது காதில் அணிந்து இருந்த கம்மலை எடுக்காமல் சென்றது ஏன்? பார்வதியம்மாள் 10 அடி தொலைவில் உள்ள தனது மகன், மருமகளை உதவிக்கு அழைக்காமல், தொலைவில் இருக்கும் தனது சகோதரி மகளை போனில் அழைத்தது ஏன்? மாமியார் நகைகள் திருடு போகாமல், மருமகள் நகைகள் மட்டும் ஏன் திருட்டுபோனது? போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் தான் இந்த வழக்கில் துப்பு துலக்க உதவியாக இருந்தது என்றனர்.  
கஷ்டத்தில் உள்ள தம்பி குடும்பத்துக்கு உதவுவதற்காக, மருமகள் நகைகளை திருடிவிட்டு நாடகமாடிய மாமியார் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story