ஆட்கொல்லி புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது


ஆட்கொல்லி புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது
x
தினத்தந்தி 15 Oct 2021 8:00 PM IST (Updated: 16 Oct 2021 1:51 PM IST)
t-max-icont-min-icon

ஆட்கொல்லி புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது

கூடலூர்

கூடலூர் பகுதியில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். இதையடுத்து அந்த புலிக்கு சிகிச்சை அளிப்பதற்காக மைசூருக்கு கொண்டு சென்றனர்.

புலி அட்டகாசம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஸ்ரீ மதுரை, முதுமலை ஊராட்சிகள், தேவர்சோலை பேரூராட்சி பகுதியில் புலி நடமாட்டம் இருந்தது.

 தொடர்ந்து சில மாதங்களாக புலி ஒன்று 20-க்கும் மேற்பட்ட கால்நடை களை அடுத்தடுத்து கொன்று அட்டகாசம் செய்து வந்தது. கடந்த மாதம் 24-ந் தேதி தனியார் தேயிலை எஸ்டேட்டில் கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்ட சந்திரன் என்ப வரை புலி அடித்து கொன்றது.

 இதையடுத்து ஆட்கொல்லி புலியை பிடிக்க வனத்துறை யினர் கூண்டுகள் வைத்தனர். மேலும் அவர்கள், புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். 

தேடுதல் வேட்டை

தனியார் எஸ்டேட் பகுதியில் இருந்து மேபீல்டு வழியாக மசினகுடிக்கு ஆட்கொல்லி புலி இடம்பெயர்ந்தது. 

கடந்த 1-ந் தேதி மசினகுடி அருகே கல்குவாரியில் கால்நடைகளை மேய்த்து கொண்டிருந்த பழங்குடியினரான மங்கள பஸ்வனை புலி தாக்கி கொன்றது. 

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில வனத் துறையினர், வனத்துறை அதிரடிப்படையினர் என 100-க்கும் மேற்பட்டோர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

புலியை சுட்டுக்கொல்ல துப்பாக்கியு டன் களமிறங்கினர். இந்த புலிக்கு T23 என பெயரிடப்பட்டது. இந்த நிலையில் புலியை சுட்டுக் கொல்ல கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

தப்பி ஓடியது

அதைத்தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்கும் பணி தீவிரப் படுத்தப்பட்டது. இதற்காக புலி நடமாட்டத்தை கண்காணிக்க மசினகுடி வனப்பகுதியில் 90 கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வந்தனர். 

தமிழக முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் ஆகியோர் களத்தில் இருந்து தேடுதல் பணியை முடுக்கி விட்டனர். 

புதருக்குள் புலி மறைந்து இருந்ததால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் சிங்காரா, மாயார், தெப்பக்காடு, ஓம்பெட்டா வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தேடும் பணி நடைபெற்றது. 


நேற்று முன்தினம் 21-வது நாளாக புலியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

மயக்க ஊசி செலுத்தினர்

ஓம்பெட்டா வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து உள்ளதா? என்று தேடியபோது கார்குடி பகுதியில் புலி சாலையை கடப்பது உறுதியானது.  

இரவு 9.30 மணியளவில் வனத்துறையினர் புலியை பிடிக்க மயக்க ஊசி செலுத்தினர். ஆனாலும் புலி தப்பி ஓடியது. 

அதைத்தொடர்ந்து புலி மயங்கி உள்ளதா? வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்ததா? என்று தேடினர். இரவு என்பதால் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
கூண்டில் அடைத்தனர்

இந்தநிலையில் நேற்று அதிகாலை முதல் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. 

மதியம் 2 மணி அளவில் மசினகுடி சோதனைச்சாவடி அருகே வனப் பகுதியில் இருந்து எருமை மாடுகள் வேகமாக வெளியே ஓடி வந்தன.  உடனே வனத்துறையினர் சென்று பார்த்தபோது ஆட்கொல்லி புலி மாட்டை அடித்து தின்று கொண்டிருந்தது. 

உடனே அந்த ஆட்கொல்லி புலியை பிடிக்க வனத்துறையினர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினர். 

இதனால் சிறிது நேரத்தில் அந்த புலி மயங்கி விழுந்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் புலியை பிடித்து இரும்பு கூண்டில் அடைத்தனர்.

கூடலூர் மற்றும் மசினகுடி பகுதிகளில் ஆட்கொல்லி புலி 4 பேரை கொன்றதால் அந்த பகுதி மக்கள் மத்தியில் அச்சம் நிலவியது. 

தற்போது வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து மயக்க ஊசி செலுத்தி ஆட்கொல்லி புலியை உயிருடன் பிடித்து உள்ளனர். 

மைசூரு கொண்டு செல்லப்பட்டது

கூடலூர் மற்றும் மசினகுடி பகுதிகளில் அட்டகாசம் செய்த புலியை தீவிர முயற்சி எடுத்து வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடித்த னர். 

இது குறித்து தகவல் அறிந்த தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹூ, தமிழக முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உள்பட அதிகாரிகள் பிடிக்கப்பட்ட புலியை நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதற்கிடையே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் கர்நாடகா மாநிலம் மைசூருவுக்கு உடனடியாக கொண்டு சென்றனர். அங்கு புலிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.


Next Story