ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஊட்டி
தொடர் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தொடர் விடுமுறை
ஆயுத பூஜை, விஜயதசமியையொட்டி தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. எனவே ஊட்டியில் நிலவும் 2-வது சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்த வண்ணம் இருக்கின்றனர்.
இதனால் ஊட்டியில் சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
தொடர் விடுமுறை காரணமாக நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
அவர்கள் மலர் மாடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட 12 ஆயிரம் பூந்தொட்டிகளில் பூத்துக் குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர்.
2-வது சீசனில் 20 ரகங்களை சேர்ந்த 5 ஆயிரம் பூந்தொட்டிகள் கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.
படகு சவாரி
அவற்றை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் இத்தாலியன் பூங்கா, ஜப்பான் பூங்கா, இலை பூங்கா அலங்கார வேலிகள் முன்பு செல்பி எடுத்துக் கொண்டனர். பெரிய புல்வெளி மைதானத்தில் குடும்பத்தினருடன் அமர்ந்து பூங்காவின் எழில் மிகுந்த அழகை கண்டு ரசித்தனர்.
ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சவாரி செய்தனர். அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
எனவே சுற்றுலா பயணிகள் நீண்டவரிசையில் காத்திருந்து நுழைவு கட்டண டிக்கெட் எடுத்தனர்.
சுற்றுலா பயணிகள்
அதேபோல் ஊட்டி ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, கர்நாடகா தோட்டக்கலை பூங்கா, பைக்காரா படகு இல்லம், சூட்டிங்மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
தொடர் விடுமுறை காரணமாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் தங்கும் விடுதிகள் நிரம்பின. முழு ஊரடங்குக்கு பிறகு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் சுற்றுலா தலங்கள் களை கட்டி வருகின்றனர். நேற்று முன்தினம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 5 ஆயிரத்து 318 சுற்றுலா பயணிகள் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story