கோவில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி


கோவில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 15 Oct 2021 8:14 PM IST (Updated: 16 Oct 2021 1:54 PM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி

கூடலூர்

விஜயதசமியையொட்டி ஊட்டி, கூடலூர், கோத்தகிரியில் உள்ள கோவில்க ளில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

விஜயதசமி

நவராத்திரி விழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் ஆயுத பூஜை நடைபெற்றது. 10-ம் நாளான விஜயதசமியன்று எந்தவொரு செயலை தொடங்கினா லும் அது சிறந்த வெற்றியை தரும் என்பது நம்பிக்கை. 

எனவே அன்று குழந்தைகள் கல்வியை தொடங்கவும், பள்ளியில் சேர்க்கவும் உகந்த நாளாகும் என்று கருதப்படுகிறது. விஜயதசமியன்று கல்வியை தொடங்கினால் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.


நேற்று விஜயதசமியையொட்டி ஊட்டி பழைய அக்ரஹாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி (வித்யாரம்பம்) நடைபெற்றது. 

இதில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்தனர். அங்கு தட்டில் நிரப்பப்பட்டு இருந்த அரிசியில் குழந்தைகளின் கையை பிடித்து ஓம் என்று எழுதி எழுத்தறிவிக்கப்பட்டது.

 இதையடுத்து குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், பென்சில்கள் வழங்கப்பட்டது. அதேபோல் ஊட்டி அய்யப்பன் கோவிலில் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடந்தது.

இதில் குழந்தைகளுக்கு அரிசியில் எழுத கற்றுக் கொடுக்கப்பட்டது. 2 கோவில்களில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கப்பட்டது. கொரோனா  காரணமாக ஊட்டி ஆஞ்சநேயர் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறவில்லை. 


கடந்த 2 மாதங்களுக்கு மேல் தொற்று பரவலை தடுக்க வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டு இருந்தது. விஜயதசமியை ஒட்டி வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டது.

அதன்படி 2 மாதங்களுக்கு பிறகு கோவில்கள் நேற்று திறக்கப்பட்டது. ஊட்டி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சுப்பிரமணிய சுவாமி கோவில், இரட்டை பிள்ளையார் கோவில், 

முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்களுக்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். 

கூடலூர் 

கூடலூர் சக்தி விநாயகர் கோவிலில் உள்ள மண்டபத்தில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டு இருந்தது. தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் மூலவர் சக்தி விநாயகருக்கு அபிஷேக அலங்கார மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

இதையடுத்து ஏராளமான குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல் ஐயப்பன், மகாவிஷ்ணு, மேல் கூடலூர் சந்தைக்கடை மாரியம்மன் உள்பட கோவில்களில் விஜயதசமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

Next Story