பிரதமர் உருவ பொம்மையை எரிக்க முயற்சி; 20 பேர் கைது


பிரதமர் உருவ பொம்மையை எரிக்க முயற்சி; 20 பேர் கைது
x
தினத்தந்தி 15 Oct 2021 9:12 PM IST (Updated: 15 Oct 2021 9:12 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பிரதமர் உருவ பொம்மையை எரிக்க முயன்றதாக 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பிரதமர் மோடி உருவ பொம்மையை எரிக்க முயன்ற 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டம்

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலைக்கு காரணமான உள்துறை மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவை
பதவி நீக்க வேண்டும், 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
அதன்படி தூத்துக்குடி தபால் தந்தி அலுவலகம் முன்பு நேற்று காலை உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து உருவபொம்மையை எரிக்க முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரின் உருவப்படங்களை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர்.

கைது

போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நல்லையா, மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி,
விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் அகமது இக்பால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம், புரட்சிகர இளைஞர் முன்னணி சுஜித், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் முகமது ஜான், தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு அருள்செல்வி, மக்கள் பாதை அமீர்ஜான், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு மகேஷ், வக்கீல் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்தனர்.

Next Story