நிலக்கரி இருப்பு குறைவு விவகாரத்தில் உரியவர்கள் மீது நடவடிக்கை- அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
நிலக்கரி இருப்பு குறைவு விவகாரத்தில் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
தூத்துக்குடி:
மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்றும், நிலக்கரி இருப்பு குறைவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தூத்துக்குடியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நிலக்கரி இருப்பு குறைவு
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் சுமார் 71 ஆயிரம் டன் நிலக்கரி பதிவேட்டுக்கும், இருப்புக்கும் இடையே குறைபாடு உள்ளது. இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அமைக்கப்பட்ட குழுவிடம் இருந்து இறுதி அறிக்கை பெறப்பட்டு, முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து சென்று மேல் நடவடிக்கை எடுக்கப்படும். யார் தவறு செய்து இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு தினமும் 16 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. 4 நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பு வைக்கப்படுகிறது. தமிழகத்துக்கு தினமும் 56 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. நேற்று 51 ஆயிரம் டன் நிலக்கரி தமிழகத்துக்கு வந்தது. தமிழகத்தின் தேவைக்கேற்ப தினமும் நிலக்கரி வந்து கொண்டிருக்கிறது.
மின்உற்பத்தி அதிகரிப்பு
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கடந்த ஆட்சியில் மின்உற்பத்தி 57 சதவீதமாக குறைந்தது. 85 சதவீத மின்உற்பத்தி நடந்தால்தான், உற்பத்தி செலவினம் குறையும்.
கடந்த ஆட்சியில் தனியாரிடம் இருந்து அதிகமாக மின்சாரம் கொள்முதல் செய்ததால், சில அனல் மின்நிலையங்களை பராமரிப்பு என்று இயக்காமலே இருந்துள்ளனர். இதனை மாற்றி தமிழகத்தில் 43 சதவீத மின்உற்பத்தியில் இருந்து 70 சதவீதமாக உயர்த்தி உள்ளோம்.
ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு
தமிழகத்தில் ஒரே ஆண்டில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின்இணைப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 386 விவசாயிகள் பயன்பெறுகின்றனர். 216 பேருக்கு மின் இணைப்பு வழங்க ஆணை வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் சூரிய ஒளி மூலம் 4 ஆயிரம் மெகாவாட்டும், கியாஸ் மூலம் 2 ஆயிரம் மெகாவாட்டும் மின்உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி மூலம் மின்உற்பத்தி செய்ய தனியார் வந்தால் ஏற்று கொள்ளப்படும். இல்லையெனில் தனியாருக்காக காத்திருக்காமல் மின்சார துறையே அதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
வைப்புத்தொகை
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தை மேம்படுத்துவதற்கு கடந்த ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் ஏட்டளவிலே உள்ளது. இதனை சரி செய்யும் வகையில் தலா ரூ.2.60-க்கு 1,000 மெகாவாட் மின்சாரமும், ரூ.3.26-க்கு 1500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான பணிகளும் நடந்து வருகிறது.
தமிழகத்தில் ஒரு மாதத்தில் மின்சார பயன்பாடு 3,023 மில்லியன் யூனிட்டில் இருந்து 4,494 மில்லியன் யூனிட்டாக உயர்ந்துள்ளது. எனினும் வருவாய் அதிகரிக்கவில்லை. மேலும், பொதுமக்கள் செலுத்த வேண்டிய ரூ.419 கோடி வைப்புத்தொகை செலுத்த வேண்டாம் என்று முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார்.
மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர்
மின்வாரியம் சார்பில் ஆண்டுக்கு ரூ.16 ஆயிரம் கோடி வட்டி செலுத்தி வருகிறோம். மின்சார இழப்பு 17.48 சதவீதமாக உள்ளது. இதில் ஒரு சதவீதம் குறைத்தால் ரூ.800 கோடி செலவு குறையும். அதற்காகத்தான் தமிழகத்தில் உள்ள 3 லட்சத்து 63 ஆயிரம் மின்மாற்றிகளில் நவீன கருவி பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனை தொடர்ந்து மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளது. இதனால் மின் கணக்கீடு செய்வதற்கு பணியாளர்கள் தேவை இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு நடத்தினார்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, திட்ட இயக்குனர் எத்திராஜ், திட்ட இயக்குனர் (உற்பத்தி) லெனி, தலைமை பொறியாளர் சாந்தினி, மேற்பார்வை பொறியாளர் பரமேசுவரன், ஜெயராஜ், தூத்துக்குடி அனல்மின்நிலைய தலைமை பொறியாளர் கிருஷ்ணகுமார், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story