டீக்கடைகளை உடைத்து திருடியவர் கைது
ஆயுதபூஜை விடுமுறையை பயன்படுத்தி டீக்கடைகளை உடைத்து நகை, பணம் திருடியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காரைக்கால், அக்.
ஆயுதபூஜை விடுமுறையை பயன்படுத்தி டீக்கடைகளை உடைத்து நகை, பணம் திருடியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
டீக்கடைகளில் திருட்டு
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சேத்தூர் மார்க்கெட் வீதியில், அன்பழகன், பாலாஜி ஆகியோர் தனித் தனியே டீ கடை நடத்தி வருகின்றனர். ஆயுதபூஜை என்பதால் கடைகளை இருவரும் சுத்தம் செய்து பூட்டிவிட்டு வீடுகளுக்கு சென்று விட்டனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) அதிகாலை அன்பழகன் கடையை திறக்க வந்தபோது, கடையின் பின்புறம் உடைக்கப்பட்டு மேஜை டிராயரில் இருந்த 18 ஆயிரம் ரொக்கம் திருட்டு போய் இருந்தது.
அதேபோல் பாலாஜி கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 9 கிராம் தங்க நகை, 65 கிராம் வெள்ளி ஆகியவை திருடப்பட்டிருந்தது.
ரோந்தில் சிக்கினார்
இதுகுறித்த புகாரின்பேரில் திருநள்ளாறு இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூட்டிய கடைகளில் கைவரிசை காட்டிய மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர்.
நேற்று அதிகாலை சேத்தூரை அடுத்த தென்னங்குடி சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதையடுத்து அவரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று முறைப்படி விசாரித்தனர்.
சிறையில் அடைப்பு
விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் உடன்குடி, பூக்கார தெருவைச் சேர்ந்த தங்கமுத்து (வயது 72) என்பதும், சேத்தூர் டீக்கடைகளில் புகுந்து திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான தங்கமுத்து மீது தமிழகம், ஆந்திரா, கேரள மாநிலங்களில் ஏராளமான திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story