எதிரே வருபவரை ஆடையின்றி காட்டும் என்று கூறி சாதாரண மூக்கு கண்ணாடியை ரூ.1 லட்சத்துக்கு விற்று மோசடி
பெரியகுளத்தில் எதிரே வருபவரை ஆடையின்றி காட்டும் என்று கூறி சாதாரண மூக்கு கண்ணாடியை ரூ.1 லட்சத்துக்கு விற்று மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
பெரியகுளம்:
பெரியகுளத்தில் எதிரே வருபவரை ஆடையின்றி காட்டும் என்று கூறி சாதாரண மூக்கு கண்ணாடியை ரூ.1 லட்சத்துக்கு விற்று மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
‘மேஜிக்’ மூக்கு கண்ணாடி
நடிகை நதியா நடித்து 1985-ம் ஆண்டு வெளியான திரைப்படம், பூவே பூச்சூடவா. இந்த படத்தில் நடிகை நதியா, சாதாரண மூக்கு கண்ணாடியை அணிந்து கொண்டு, அது மேஜிக் மூக்கு கண்ணாடி என்றும், அதன்மூலம் பார்த்தால் எதிரே வரும் நபர் ஆடைகள் இன்றி தெரிவார் என்றும் கூறி ஏமாற்றுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
அந்த சினிமா காட்சி போன்று தேனி மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் சாதாரண மூக்கு கண்ணாடியை விற்று மோசடி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தேனி அருகே உள்ள உப்புக்கோட்டையை சேர்ந்தவர் அரசமுத்து (வயது 39). இவரது நண்பர் திவாகர் (26). இவர்கள் 2 பேரும் கும்பகோணத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான மதன் (42) என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்தனர். அப்போது 2 பேரும் தங்களிடம் மேஜிக் மூக்கு கண்ணாடி இருப்பதாகவும், இந்த கண்ணாடியை அணிந்தால் எதிரே உள்ள நபர் ஆடை அணிந்திருந்தாலும், ஆடையின்றி உடல் மட்டும் தெரியும் என்று ஆசைவார்த்தை கூறினர். மேலும் இந்த மேஜிக் மூக்கு கண்ணாடியின் மதிப்பு ரூ.1 லட்சம் என தெரிவித்தனர்.
ரூ.1 லட்சம் மோசடி
இதை உண்மை என்று நம்பிய மதன் அந்த கண்ணாடியை வாங்க விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து அவரை தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு வருமாறு, அரசமுத்து தெரிவித்தார். அதன்பேரில் மதன், தனது நண்பர்களான சீனிவாசன் (48), வரதராஜன் (49) ஆகியோருடன் மேஜிக் மூக்கு கண்ணாடியை வாங்குவதற்காக கடந்த 13-ந்தேதி பெரியகுளத்திற்கு வந்தனர். அப்போது பெரியகுளத்தில் மயான பகுதிக்கு வருமாறு அரசமுத்துவும், திவாகரும் அழைத்தனர். அதன்படி மதன் அங்கு நண்பர்களுடன் சென்றார்.
அப்போது அரசமுத்து, மூக்கு கண்ணாடியை மதனிடம் கொடுத்தார். அதற்காக ரூ.1 லட்சத்தை, அவரிடம் இருந்து திவாகர் பெற்றுக்கொண்டார். பணத்தை வாங்கிய சில நொடிகளில் திவாகர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதனால் சந்தேகமடைந்த மதன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, அரசமுத்துவை பிடித்தனர். பின்னர் அவர் கொடுத்த மேஜிக் கண்ணாடியை மதன் பயன்படுத்தினார். ஆனால் அது சாதாரண கண்ணாடி என்பது தெரியவந்தது. இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த மதனும், அவரது நண்பர்கள் வரதராஜன், சீனிவாசன் ஆகியோரும் சேர்ந்து அரச முத்துவை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
4 பேர் கைது
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி செய்த அரசமுத்துவை கைது செய்தனர். தப்பியோடிய திவாகரை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே அரசமுத்து, தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மதன், வரதராஜன், சீனிவாசன் ஆகிய 3 பேர் மீது போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மதன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story