மேகமலை அருவியில் குளிக்க தடை நீக்கப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
மேகமலை அருவியில் குளிப்பதற்கான தடை நீக்கப்படுமா என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கடமலைக்குண்டு:
மேகமலை அருவியில் குளிப்பதற்கான தடை நீக்கப்படுமா என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மேகமலை அருவி
தேனி மாவட்டம் கோம்பைத்தொழு அருகே ‘சின்ன சுருளி’ என்று அழைக்கப்படும் மேகமலை அருவி உள்ளது. சுற்றுலா தலமாக விளங்கும் இந்த அருவிக்கு தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 1½ ஆண்டாக மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் மேகமலை அருவி அருகே வனத்துறையினர் சோதனை சாவடி அமைத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வனத்துறையினர் தடை
இந்தநிலையில் மேகமலை வனப்பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக தற்போது அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதற்கிடையே பண்டிகை கால விடுமுறையையொட்டி கடந்த 2 நாட்களாக மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் மேகமலை அருவிக்கு படையெடுத்தனர். ஆனால் அவர்களை வனத்துறையினர் சோதனை சாவடியில் நிறுத்தி, திருப்பி அனுப்பினர்.
சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்ததால் வனத்துறையினருடன் இணைந்து மயிலாடும்பாறை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, அவர்களை திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வெகு தொலைவில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் சிலர், வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
மேலும் சிலர் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள ஆபத்தான மலைப்பாதை வழியாக அருவிக்கு சென்று குளித்து வருகின்றனர். இதனால் வனவிலங்குகளால் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழலும் உள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதுபோல் மேகமலை அருவியில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story