தேவதானப்பட்டி அருகே கிணற்றில் மிதந்த வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை
தேவதானப்பட்டி அருகே கிணற்றில் மிதந்த வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் ஜவஹர் சாதிக். இவரது மகன் முகமது ஹமீம் (வயது 21). இவர் கடந்த 5-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து ஜவஹர் சாதிக், தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமது ஹமீமை தேடி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி கெங்குவார்பட்டியில் தனியாருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது கிணற்றில் மிதந்த வாலிபர், முகமது ஹமீம் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமது ஹமீம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து உடலை கிணற்றில் வீசி சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story