ஆழியாறு அணையில் குதிக்க போவதாக கூறிய விவசாயிகளால் பரபரப்பு
கூடுதல் தண்ணீர் வழங்காததால் ஆத்திரம் அடைந்து, பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சியை புறக்கணித்த விவசாயிகள், ஆழியாறு அணையில் குதிக்க போவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி
கூடுதல் தண்ணீர் வழங்காததால் ஆத்திரம் அடைந்து, பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சியை புறக்கணித்த விவசாயிகள், ஆழியாறு அணையில் குதிக்க போவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் வாக்குவாதம்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்திருந்தனர். இதற்கிடையில் நிகழ்ச்சிக்கு வந்த விவசாயிகளிடம் அதிகாரிகள் 80 நாட்களுக்கு மொத்தம் 2,573 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.
அதற்கு விவசாயிகள் 2,709 மில்லியன் கன அடி தருவதாக கூறி விட்டு, தற்போது தண்ணீரை குறைத்து வழங்குவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் உரிய தண்ணீரை வழங்காமல் அணையில் இருந்து தண்ணீரை திறக்க கூடாது என்றனர்.
பேச்சுவார்த்தை தோல்வி
இதையடுத்து அவர்களிடம், சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நரேந்திரன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது அரசாணைப்படி தண்ணீரை முதலில் திறக்கலாம். அதன்பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி கூடுதலாக தண்ணீரை பெறுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். ஆனால் அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் உரிய தண்ணீரை திறந்து விடவில்லை என்றால் அணையில் குதிக்க போவதாக தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை மதியம் 12 மணி வரை நீடித்தது. தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் விவசாயிகள் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியை புறக்கணித்தனர். இதுகுறித்து புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கூறியதாவது:-
முற்றுகை போராட்டம்
கடந்த 2018-ம் ஆண்டு மழை பெய்து அணைகள் முழுகொள்ளளவை எட்டின. அப்போது புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு 2,710 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்கப்பட்டது. தற்போது அதேபோன்று அணைகள் நிரம்பி உள்ளன. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நடந்த நீர்பங்கீடு பேச்சுவார்த்தையின்போது தெரிவிக்கப்பட்டது. மேலும் பேச்சுவார்த்தையில் 2709 மில்லியன் கன அடி நீருக்கும் குறையாமல் வழங்குவது என்று முடிவு எட்டப்பட்டது. ஆனால் தற்போது அரசாணையில் 80 நாட்களுக்கு 2,573 மில்லியன் கன அடி நீர் தான் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே எங்களுக்கு உரிய நீரான 90 நாட்களுக்கு 2,880 மில்லியன் கன அடி நீரை வழங்க வேண்டும். தற்போது சப்-கலெக்டர் ஒரு வாரத்திற்குள் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளார். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விவசாயிகளை ஒருங்கிணைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம். அரசாணையை மதித்து தண்ணீர் திறக்க ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அதே நேரத்தில் உரிய நீரை வழங்காததால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story