போடி அருகே குளத்தில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி


போடி அருகே குளத்தில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி
x
தினத்தந்தி 15 Oct 2021 11:03 PM IST (Updated: 15 Oct 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

போடி அருகே பசுவை குளிப்பாட்ட சென்ற பிளஸ்-1 மாணவர் குளத்தில் மூழ்கி பலியானார்.

போடி:
போடி அருகே பசுவை குளிப்பாட்ட சென்ற பிளஸ்-1 மாணவர் குளத்தில் மூழ்கி பலியானார்.
பிளஸ்-1 மாணவர்
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சிலமலை தெற்கு தெருவை சேர்ந்தவர் கூடலிங்கம். கூலித்தொழிலாளி. இவரது மகன் ராம்குமார் (வயது 16). இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் தனது வீட்டில் வளர்க்கும் பசுமாட்டினை குளிப்பாட்டுவதற்காக நேற்று அப்பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன் சிலமலையில் இருந்து மணியம்பட்டி செல்லும் சாலையில் உள்ள சப்பாணி குளத்திற்கு சென்றார். 
அப்போது குளத்துக்குள் பசுமாட்டை இறக்கி, அதை ராம்குமார் குளிப்பாட்டி கொண்டிருந்தார். அப்போது பசுமாடு திடீரென்று மிரண்டது. இதனால் பதற்றமடைந்த ராம்குமார், மாட்டின் கயிற்றை விட்டுவிட்டு குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றார். அப்போது அவருக்கு நீச்சல் தெரியாத நிலையில் நீரில் மூழ்கி தத்தளித்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள், அக்கம்பக்கத்தினரை வரவழைத்தனர். அவர்களில் சிலர் குளத்தில் இறங்கி மாணவரை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. 
உடல் மீட்பு
பின்னர் இதுகுறித்து போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் குளத்தில் இறங்கி ராம்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேர தேடுதல் பணிக்கு பிறகு ராம்குமார் இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது. 
பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
குளத்தில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலியான சம்பவம் சிலமலை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story