கடன் வாங்கிவிட்டு தப்பிய நண்பனை காட்டிக்கொடுத்ததால்தொழிலாளி கொலை


கடன் வாங்கிவிட்டு தப்பிய  நண்பனை காட்டிக்கொடுத்ததால்தொழிலாளி கொலை
x
தினத்தந்தி 15 Oct 2021 11:45 PM IST (Updated: 15 Oct 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

கடன் வாங்கிவிட்டு தப்பிய நண்பனை காட்டிக்கொடுத்ததால் தொழிலாளி கொலை

ஆரணி

கடன் வாங்கிவிட்டு தலைமறைவானதால் காட்டிக்கொடுத்ததாக நண்பனை தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.

பாம்பு பிடிக்கும் தொழிலாளி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கொசப்பாளையம் பங்களா தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் யுவராஜ் (வயது 25) பாம்பு பிடிப்பதை தொழிலாகக் கொண்டிருந்தார். மேலும் ஆட்டோ ஓட்டும் தொழிலும் செய்து வந்துள்ளார். 

கடந்த 13-ந் தேதி இரவு யுவராஜ் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது அங்கிருந்த மற்றொரு கும்பலுடன் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டி மோதலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த ஆரணி நகர போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து யுவராஜ் வீட்டுக்கு சென்று விட்டார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் யுவராஜை இரவு முழுவதும் தேடி வந்தனர். ஆனால் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஆரணி கொசப்பாளையம் திருமலைசமுத்திரம் ஏரிக்கரை அருகே உள்ள எல்லையம்மன் கோவிலில் யுவராஜ் இறந்து கிடந்தார்.

படுகொலை

தகவல் அறிந்த ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன்,  நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் ஆகியோர் அங்கு சென்று நடத்திய விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்காக உடல் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
இதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி உத்தரவின்படி குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிடப்பட்டது. 

மோப்பநாய்

திருவண்ணாமலையில் இருந்து மோப்ப நாய் ‘மியாவ்’ வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடத்திலிருந்து மோப்பம் பிடித்தவாறு கூட்ரோடு வரை ஓடிச்சென்று நின்று விட்டது. 
மாவட்ட கைரேகை தடயவியல் நிபுணர்கள் ஜெமீஸ், பாரி ஆகியோர் வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடத்தில் தடயங்களை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்த சந்தேகப்படும்படியான நபரை போலீசார் விசாரித்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் ஆரணி கொசப்பாளையம் பகுதி குங்குலியர் தெருவைச் சேர்ந்த தொழிலாளியான தணிகைவேல் (32) என்பதும், யுவராஜை கொலை செய்ததும் தெரியவந்தது.

பரபரப்பு தகவல்

அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்ததில் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன. ஆரணி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சிவா மகன் தினேஷ் என்பவரிடம் ரூ.9 ஆயிரத்தை தணிகைவேல் கடனாக பெற்றிருந்துள்ளார். அதனை பல மாதங்களாகியும் திருப்பி தராத நிலையில் அவர் தலைமறைவாகி விட்டார்.

அவருக்கு நெருக்கமான நண்பராக யுவராஜ் இருந்ததால் தணிகைவேல் இருக்கும் இடத்தை கூறும்படி தினேஷ் கேட்டுள்ளார். அப்போது தணிகைவேல் சென்னை மதுரவாயலில் உள்ள அவரது அக்கா வீட்டில் தங்கியிருந்து ஆவடி பகுதியில் கட்டிட பணிக்கு  சென்று வருவது தெரியவந்தது.

மது அருந்தும்போது தகராறு

அதனைத் தொடர்ந்து தணிகைவேல் தங்கியிருந்த வீட்டிற்கு தினேஷ் சென்று இருந்த நிலையில் தணிகைவேல் ஆரணிக்கு வந்திருப்பதாக அங்கு இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தினேஷ் ஆரணிக்கு திரும்பி வந்து தணிகைவேலை சந்தித்து பணத்தை கேட்டுள்ளார். உடனே அவர் தனது தாயாரிடம் நகையை கேட்டு பெற்று அடகு வைத்து ரூ.9 ஆயிரத்தை திருப்பி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் தணிகைவேல் மற்றும் சிலருடன் கடந்த 13-ந் தேதி இரவு யுவராஜ் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டுள்ளது.

நான் சென்னை மதுரவாயல் பகுதியில் தங்கி இருந்தபோது என்னை காட்டிக்கொடுத்தது நீ தானே என கேட்டு அங்கிருந்த கருங்கல்லை குடிபோதையில் யுவராஜின் தலையில் போட்டுள்ளார். அதில் மயங்கி விழுந்த யுவராஜ் இறந்து போனார். இதன் மூலம் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது.

கைது 

இதனையடுத்து தணிகைவேலை ஆரணி நகர போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஆரணி பகுதியில் கொலை நடந்ததை உடனடியாக தனிப்படை  போலீசார் கொலையாளியை பிடித்ததை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு் பாராட்டினார்.

Next Story