துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் பெண்ணின் தாய் கிருமி நாசினியை குடித்ததால் பரபரப்பு
ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்த நிலையில் விசாரணையின்போது பெண்ணின் தாயார் கிருமிநாசினியை குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி, அக்.16-
ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்த நிலையில் விசாரணையின்போது பெண்ணின் தாயார் கிருமிநாசினியை குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செவிலியர் மாணவி
கண்ணமங்கலத்தை அடுத்த சின்ன அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் சுவேதா (வயது 20), வேலூர் அருகாமையில் உள்ள நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் அங்கு படித்தபோது பயிற்சிக்காக தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்த ஆரணி- இரும்பேடு காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த மணி மகன் மாதவன் (25) என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது,இந்த நிலையில் சுவேதா கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனதாகவும் அவரை கடத்தியிருக்கலாம் என கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
விசாரணை
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவி சுவேதாவை தேடி வந்தார். இந்த நிலையில் அவரை இரும்பேடு, காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த மாதவன் தான் கடத்தி சென்றார் என்பதை உறுதி செய்து சுவேதாவின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் நேரில் புகார் செய்தனர்.
இவ்வழக்கு சம்பந்தமாக ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வருமாறு சுவேதாவின் தாய்க்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று காலை சுவேதா, காதலன் மாதவன் ஆகியோர் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளுடன் தஞ்சம் அடைந்தனர். போலீசார் விசாரித்து கொண்டிருக்கும்போதே தாங்கள் பதிவுத்திருமணம் செய்து விட்டதாகவும் சேர்ந்து வாழப் போவதாகவும் உறுதியளித்தனர்.
கிருமி நாசினி
இந்த நிலையில் சுவேதாவின் தாய் உஷா உறவினர்களுடன் அங்கு வந்தார். அவர் கொரோனா பரவாமல் இருப்பதற்காக ைககளை சுத்தம் செய்ய கிருமி நாசினி கொண்டு வந்திருந்தார். போலீஸ் விசாரணையின்போது காதலனுடன்தான் செல்வேன் என மகள் சுவேதா கூறியதால் வேதனை அடைந்த உஷா திடீரென கையில் வைத்திருந்த கிருமி நாசினியை குடித்து விட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அவரை ஆரணி அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். மேலும் சுவேதாவின் வாக்குமூலத்தை பெற்ற போலீசார் அவர் மேஜர் என்பதால் மாதவனுடன் அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story