அரசு அனுமதி வழங்கியதையொட்டி கோவில்களில் பக்தர்கள் தரிசனம்
அரசு அனுமதி வழங்கியதையொட்டி கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கரூர்
அனுமதி
தமிழகத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை நீக்கி அனைத்து நாட்களிலும் கோவில்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என பக்தர்களும், கட்சியினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததை கருத்தில் கொண்டு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
பக்தர்கள் சாமி தரிசனம்
இதனையடுத்து நேற்று கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணசுவாமி கோவில், கரூர் மாரியம்மன் கோவில், வெண்ணைமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை கோவில்கள் திறக்கப்பட்டதால் கரூர் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் ஆர்வமுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் முக கவசம் அணிந்து வரவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதேபோல் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணசுவாமி கோவிலில் புரட்டாசி மாதம் என்பதால் பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது.
நொய்யல்
புன்னம் சத்திரம் அருகே உள்ள கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டுஅம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
வேலாயுதம்பாளையம்
இதேபோல் வேலாயுதம்பாளையம், தோகைமலை க.பரமத்தி, அரவக்குறிச்சி, குளித்தலை, தரகம்பட்டி, லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம், வெள்ளியணை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களும் நேற்று திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இங்கு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story