தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 16 Oct 2021 2:27 AM IST (Updated: 16 Oct 2021 2:27 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

ஆற்று பாலத்தின் சுவர் சேதம் 
பழனி அருகே மானூரில் ஆற்றின் குறுக்கே அமைந்து இருக்கும் பாலம் சேதம் அடைந்து விட்டது. இந்த பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. ஏதாவது ஒரு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவரில் மோதினால் பெரும் விபத்தாகி விடும். அதற்குள் பாலத்தின் சுவரை சரிசெய்வார்களா?  -அறிவாசான், மானூர்.

சாலையோர ஆக்கிரமிப்பு 
திண்டுக்கல் அருகே உள்ள நல்லமனார்கோட்டையை அடுத்த தொட்டணம்பட்டியில் திண்டுக்கல்-கரூர் சாலையின் ஓரம் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டன. இதனால் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு கூட இடமில்லை. வேறுவழியின்றி பொதுமக்கள் சாலையில் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. இதை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். -பாலசந்திரன், நல்லமனார்கோட்டை.

தெருவிளக்குகள் சரிசெய்யப்படுமா?
ஆத்தூர் தாலுகா பாளையங்கோட்டை ஊராட்சி பிரவான்பட்டியில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் இரவில் இருளுக்கு நடுவே மக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. எனவே தெருவிளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரமேஷ்குமார், பிரவான்பட்டி.

சேதம் அடைந்த மின்கம்பம்
நிலக்கோட்டை தாலுகா பழைய வத்தலக்குண்டு கலைஞர்நகரில் உள்ள ஒரு மின்கம்பம் சேதம் அடைந்து விட்டது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் எலும்பு கூடு போன்று காட்சி அளிக்கிறது. பலத்த காற்று, மழைக்கு மின்கம்பம் முறிந்து விழும் முன்பு, அதை மாற்ற வேண்டும். -தங்கராஜ், பழைய வத்தலக்குண்டு.

ரேஷன்கடைக்கு நிரந்தர ஊழியர்
தேனியில் ஒருசில ரேஷன்கடைகளில் நிரந்தர ஊழியர்கள் இல்லாமல், தற்காலிக ஊழியர்கள் வேலை செய்கின்றனர். இதனால் ரேஷன் பொருள் வினியோகம் முறையாக நடைபெறுவது இல்லை. ரேஷன் பொருட்களை நம்பி இருக்கும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே ரேஷன்கடைகளில் நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும். -முருகன், தேனி.


Next Story