அடுக்குமாடி மேற்கூரை இடிந்து விழுந்தது


அடுக்குமாடி மேற்கூரை இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 16 Oct 2021 2:46 AM IST (Updated: 16 Oct 2021 2:46 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி பகுதியில் அடுக்குமாடி மேற்கூரை இடிந்து விழுந்தது.

திருச்சி
திருச்சி காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி அருகே தாராநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் பழமையான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 22 வீடுகள் உள்ளன. அதில், 8 வீடுகளில் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கட்டிடத்தின் மேற்கூரை சுவர் திடீரென இடிந்து விழுந்தது. மேற்கூரை இடியும் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்து பார்த்தனர். அப்போது பால்கனி சுவர் இடிந்து விழுந்ததால் யாரும் வெளியே வர முடியாதபடி தவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு அவர்களை மீட்டனர். மேற்கூரை இடிந்து விழுந்ததில் அங்கு வசித்த ரங்கநாயகி (வயது 74) என்ற பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர், சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட நடவடிக்கையாக அந்த கட்டிடத்தை மீண்டும் பயன்படுத்த போலீஸ் தடை விதித்ததுடன் மக்கள் உள்ளே நுழைவதை தடுக்க நுழைவு கதவை சங்கிலியால் பூட்டு போட்டு `சீல்' வைத்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story