இலங்கை அகதிகள் என்பதை மறைத்து பாஸ்போர்ட் எடுத்த 2 பேர் கைது


இலங்கை அகதிகள் என்பதை மறைத்து பாஸ்போர்ட் எடுத்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 Oct 2021 2:50 AM IST (Updated: 16 Oct 2021 2:50 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை அகதிகள் என்பதை மறைத்து பாஸ்போர்ட் எடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் ராஜா (வயது 44). இலங்கை அகதியான இவர் டி.வி. பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார். ஸ்ரீகாந்த் ராஜா எறையூரில் தங்கியிருந்தபோது. அவரது மனைவி வீட்டின் முகவரியை வைத்து வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் மற்றும் பான்கார்டு ஆகியவற்றை பெற்றுள்ளார். மேற்படி ஆவணங்களை பயன்படுத்தி கடந்த 2019-ம் ஆண்டு இலங்கை அகதி என்பதை மறைத்து ஸ்ரீகாந்த்ராஜா இந்திய பாஸ்போர்ட்  பெற்றுள்ளார்.
இதேபோல் இலங்கை அகதியான சூனிகண்ணன் என்ற சுதர்சன் (40) என்பவர் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட காரணத்தினால் இலங்கை அகதிகள் பதிவேட்டில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தினால் பெரம்பலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது சூனிகண்ணன் தனது குடும்பத்தினருடன் துறைமங்கலம்-நெடுவாசல் சாலை பார்க்கவன் தெருவில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். மேலும் அவர் பாலக்கரையில் தள்ளுவண்டியில் சிப்ஸ் வியாபாரம் செய்து வருகிறார். சூனிகண்ணன் திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டியில் தங்கியிருந்தபோது வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை பெற்று தற்போது பெரம்பலூர் மாவட்ட முகவரிக்கு மாற்றம் செய்துள்ளார். மேற்படி ஆவணங்களை பயன்படுத்தி கடந்த 2019-ம் ஆண்டு இலங்கை அகதி என்பதை மறைத்து சூனிகண்ணன் இந்திய பாஸ்போர்ட்டு பெற்றுள்ளார். இலங்கை அகதிகள் என்பதை மறைத்து இந்திய பாஸ்போர்ட் எடுத்த ஸ்ரீகாந்த்ராஜா, சூனிகண்ணன் ஆகிய 2 பேரை பெரம்பலூர் மாவட்ட கீயூ உளவுப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்து, தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story