தலைமை ஆசிரியர் கொலை வழக்கில் வாலிபர் கைது
தலைமை ஆசிரியர் கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
உடையார்பாளையம்:
தலைமை ஆசிரியர் கொலை
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் செட்டியார் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் ஸ்ரீபுரந்தான் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 5-ந் தேதியன்று மாலை பள்ளி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் உடையார்பாளையம்- த.சோழங்குறிச்சி சாலையில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது குறித்து செல்வராஜின் மனைவி உஷாராணி அளித்த புகாரின் அடிப்படையில் உடையார்பாளையம் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் விசாரணை நடத்தினார். மேலும் திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர், அரியலூர் மாவட்ட சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, முதற்கட்ட விசாரணை குறித்து கேட்டறிந்தனர். இதனைத்தொடர்ந்து டி.ஐ.ஜி. அறிவுரைப்படி, சூப்பிரண்டு உத்தரவின்படி ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
வாலிபர் கைது
போலீசாரின் விசாரணையில், ஜெயங்கொண்டம் காமராஜபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சேகரின் மகன் வெங்கடேசன்(வயது 23) என்பவர், தனது பணத்தேவைக்காக செல்வராஜை மறித்து வழிப்பறியில் ஈடுபட்டபோது, அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் தான் வைத்திருந்த பட்டாக்கத்தியால் செல்வராஜை வெட்டியதில் அவர் உயிரிழந்ததும், அந்த வழியாக வாகனங்கள் மற்றும் ஆட்கள் வந்ததால் வெங்கடேசன் உடனடியாக தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீசார் சோழங்குறிச்சி சிவன் கோவில் அருகே வெங்கடேசனை கைது செய்ய முயன்றனர். அப்போது அவர் தப்பிச்செல்ல முயன்றார். இருப்பினும் போலீசார் வெங்கடேசனை விரட்டிப்பிடித்து கைது செய்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவர் பயன்படுத்திய பட்டாக்கத்தி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story