கொரோனா கட்டுப்பாடு தளர்வு: சேலத்தில் கோவில்கள் திறப்பு; பக்தர்கள் மகிழ்ச்சி
கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக சேலத்தில் கோவில்கள் திறக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம்:
கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக சேலத்தில் கோவில்கள் திறக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவில்கள் திறப்பு
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதையொட்டி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், வாரத்தில் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து நேற்று கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் திறக்கப்பட்டன. பல மாதங்களுக்கு பின் கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பக்தர்கள் தரிசனம்
சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் விஜயதசமியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தது. வெள்ளிக்கிழமை தடை நீங்கியதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். அதேபோல், ராஜகணபதி கோவிலிலும் நேற்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரினம் செய்து வழிபட்டனர்.
மேலும், சேலம் கோட்டை பெருமாள் கோவில், சுகவனேசுவரர் கோவில், அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவில், குமரகிரி முருகன் கோவில், 2-வது அக்ரஹாரம் காசி விஸ்வநாதர் கோவில், ஆனந்தா இறக்கம் வேணுகோபால சுவாமி கோவில், பட்டைகோவில், அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவில், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், எல்லைப்பிடாரியம்மன் கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டன.
அறிவுறுத்தல்
இதேபோல் காருவள்ளி சின்னதிருப்பதியில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் திறக்கப்பட்டது. பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. இதையொட்டி நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் முககவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இந்தநிலையில் கோவிலில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story