சேலத்தில் அழகு நிலைய பெண் உரிமையாளர் கொலை-உடலை சூட்கேசில் அடைத்து வைத்த கொடூரம்
சேலத்தில் அழகு நிலைய பெண் உரிமையாளரை கொலை செய்து, அவரது உடலை சூட்கேசில் அடைத்து வைக்கப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.
சேலம்:
சேலத்தில் அழகு நிலைய பெண் உரிமையாளரை கொலை செய்து, அவரது உடலை சூட்கேசில் அடைத்து வைக்கப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.
இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
அழகு நிலைய பெண் உரிமையாளர்
சேலம் அஸ்தம்பட்டி மண்டலக்குழு முன்னாள் தலைவர் நடேசன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு குமாரசாமிப்பட்டி மேற்கு தெருவில் உள்ளது. இந்தநிலையில் அவரது குடியிருப்பில் 2-வது மாடியில் உள்ள 2 வீடுகளை கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த மாற்றுத்திறனாளியான தேஸ் மண்டேல் (வயது 27) என்ற பெண், பிரதாப் என்கிற முகமது சதான் என்பவரை தனது கணவர் என்று கூறி வாடகைக்கு எடுத்து தங்கினார்.
தேஸ் மண்டேல் சேலம் சங்கர் நகர் உள்பட 3 இடங்களில் அழகு நிலையம் நடத்தி வந்தார். இந்தநிலையில் முகமது சதான் நேற்று மதியம் நடேசனின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, தான் சென்னையில் உள்ளதாகவும் கடந்த 4 நாட்களாக தேஸ் மண்டேல், செல்போன் அழைப்பை எடுக்கவில்லை என்றும் கூறி உள்ளார். இதையடுத்து நடேசன் அவருடைய வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. மேலும் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றமும் வீசியது.
போலீசார் விரைந்தனர்
இதனால் சந்தேகமடைந்த அவர் இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர்கள் ஆல்பட், கணேசன், இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் போலீசார் வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது படுக்கை அறையில் உள்ள சிலாப்பில் கருப்பு கலர் சூட்கேஸ் பெட்டி ஒன்று இருந்தது. மேலும் அதில் இருந்து துர்நாற்றமும் வீசியது. இதையடுத்து அந்த சூட்கேசை போலீசார் கீழே இறக்கி பார்த்தனர்.
சூட்கேசுக்குள் பெண் பிணம்
அப்போது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சூட்கேசுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அழுகிய நிலையில் இருந்த அந்த பெண்ணின் உடலை போலீசார் வெளியே எடுத்தனர். அப்போது அரை குறை ஆடையுடன் சூட்கேசில் பெண் பிணமாக கிடந்தார். மேலும் அந்த பெண்ணின் கைகளும், கால்களும் சேலையால் கட்டப்பட்டிருந்தன. அந்த பெண்ணின் ஒரு கால் வளர்ச்சி குறைவாக இருந்ததால் மாற்றுத்திறனாளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கொலை செய்யப்பட்டது தேஸ் மண்டேல் என்பது போலீசாரால் உறுதி செய்யப்பட்டது.
இதனிடையே இந்த கொலை குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி அங்கு விரைந்து சென்று பார்வையிட்டார். இதையடுத்து தேஸ் மண்டேல் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
கண்காணிப்பு கேமரா
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், கொலை செய்யப்பட்டவர் தேஸ் மண்டேல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மீது 2 வழக்குகள் அஸ்தம்பட்டி, பள்ளப்பட்டி ஆகிய போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளன. அவர் எப்படி கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் தான் தெரியவரும். குடியிருப்பு பகுதி அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகிறோம். மேலும் கொலையாளிகளை விரைவில் பிடிப்போம் என்றனர்.
சேலத்தில் பெண்ணை கொலை செய்து, உடலை சூட்கேசில் அடைத்து வைத்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story