சேலம் மாநகராட்சி பகுதிகளில் கடந்த 3 நாட்களில் சிறப்பு துப்புரவு பணிகள் மூலம் 1,500 டன் குப்பைகள் அகற்றம்
சேலம் மாநகராட்சி பகுதிகளில் கடந்த 3 நாட்களில் சிறப்பு துப்புரவு பணிகள் மூலம் 1,500 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
சேலம்:
சேலம் மாநகராட்சி பகுதிகளில் கடந்த 3 நாட்களில் சிறப்பு துப்புரவு பணிகள் மூலம் 1,500 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
ஆயுத பூஜை பண்டிகை
நாடு முழுவதும் நேற்று முன்தினம் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. இதையொட்டி தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், ஓட்டல்களை சுத்தம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தி தொழிலாளர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. சேலம் மாநகர் பகுதியில் ஆயுதபூஜையையொட்டி தொழில் நிறுவனங்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதற்காக வாழை மற்றும் பூ மாலைகள் ஆகியவை தொழில் நிறுவனங்களின் முன்பு தோரணமாக கட்டப்பட்டிருந்தன.
இந்தநிலையில், ஆயுதபூஜை பண்டிகை முடிவடைந்ததால் தொழில் நிறுவனங்களில் இருந்த குப்பைகள் அந்தந்த பகுதியில் இருந்த குப்பை தொட்டிகள் மற்றும் தெருவில் கொட்டப்பட்டன. விற்பனை செய்யப்படாமல் கிடந்த வாழைகள், பூக்கள், பூசணிக்காய் அனைத்தும் அப்புறப்படுத்தாமல் சாலையோரம் கிடந்தது.
சிறப்பு துப்புரவு பணி
ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி வழக்கத்தைவிட சேலம் மாநகராட்சி பகுதியில் குப்பைகள் அதிகளவில் தேங்கும் என்பதால் குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆணையாளர் கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில், மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் கடந்த 3 நாட்களாக சிறப்பு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து வார்டுகளிலும் கூடுதல் குப்பை அள்ளும் வாகனங்கள் மூலம், குப்பைகள் உடனுக்குடன் அள்ளப்பட்டு குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த சிறப்பு துப்புரவு பணிகள் நேற்று இரவு வரையிலும் நீடித்தது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
சேலம் மாநகரில் தினமும் 350 முதல் 400 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்படுவது வழக்கம். ஆனால் நேற்று முன்தினம் ஆயுதபூஜையையொட்டி வழக்கத்தைவிட அதிகளவில் குப்பைகள் தேங்கும் என்பதால் சிறப்பு துப்புரவு பணிகள் நடந்தன. 60 வார்டுகளிலும் சிறப்பு துப்புரவு பணியில் மாநகராட்சிக்கு சொந்தமான 700-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டன. கடந்த 3 நாட்களில் 1,500 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. அதேநேரத்தில், உணவு பொருட்கள், பழங்கள், காய்கறிகள், வாழை இலைகள், தண்டுகள் உள்ளிட்டவை நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story