குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று நிறைவு; பக்தர்கள் காப்பு களைந்தனர்


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று நிறைவு; பக்தர்கள் காப்பு களைந்தனர்
x
தினத்தந்தி 16 Oct 2021 7:37 PM IST (Updated: 16 Oct 2021 7:37 PM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று நிறைவு பெறுகிறது. இதையொட்டி நேற்று பக்தர்கள் காப்பு களைந்தனர்.

குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது. விழாவையொட்டி விரதம் இருந்து காப்புக்கட்டி வேடம் அணிந்த பக்தர்கள் நேற்று காப்பு களைந்தனர்.

தசரா திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் பிரசித்திபெற்ற தசரா திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலித்தார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக்கிய விழா நாட்களிலும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவிலலை.

சூரசம்ஹாரம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவிலின் முன்பு பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்றது. இரவு 11.30 மணிக்கு கோவில் முன்பு செண்டை மேளம் முழங்க, அம்மன் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருளினார்.
அப்போது ஆணவமே உருவான மகிஷாசூரன் அம்மனை 3 முறை வலம் வந்து ஆக்ரோஷத்துடன் போரிட தயாரானான். அவனை அம்மன் 12 மணிக்கு சூலாயுதத்தால் வதம் செய்தார். தொடர்ந்து மாயமே உருவான மகிஷாசூரன் சிங்க முகம், எருமை தலை, சேவல் என அடுத்தடுத்து உருமாறி அன்னையிடம் போரிட வந்தான். ஒவ்வொரு உருவமாக மாறி உக்கிரத்துடன் வலம் வந்து போரிட்ட மகிஷாசூரனை முறையே 12.10 மணி, 12.15 மணி, 12.20 மணிக்கு அன்னை சூலாயுதத்தால் அழித்தார். சூரசம்ஹாரம் முடிந்ததும் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

காப்பு களைந்த பக்தர்கள்

11-ம் திருநாளான நேற்று அதிகாலையில் அன்னை கோவிலின் முன்மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சினம் தணிக்க அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலையிலும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
மதியம் சினம் தணிந்த அம்மன் சாந்த ரூபத்தில் அருள்பாலித்தார். மாலையில் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வலம் வந்து மீண்டும் கோவிலை சேர்ந்தார். அதன்பிறகு கொடியிறக்கப்பட்டு, அம்மனுக்கு காப்பு களையப்பட்டது. தொடர்ந்து பல்வேறு ஊர்களிலும் விரதம் இருந்து வேடம் அணிந்த பக்தர்கள் அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களில் காப்பு மற்றும் வேடங்களை களைந்து விரதத்தை நிறைவு செய்தனர்.

இன்று, பாலாபிஷேகம்

விழாவின் நிறைவு நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் சுவாமி-அம்மனுக்கு பாலாபிஷேகம், தீபாராதனையுடன் விழா நிறைவு பெறுகிறது. இன்று கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
நாளை (திங்கட்கிழமை) முதல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தசரா திருவிழாவையொட்டி நேர்த்திக்கடனாக விரதம் இருந்து வேடமிட்டு காணிக்கை வசூலித்த பக்தர்கள் நாைள முதல் கோவிலில் செலுத்தி வழிபடுகின்றனர்.

Next Story