வீர தீர செயல் புரிந்த சிறுமிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்


வீர தீர செயல் புரிந்த சிறுமிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 16 Oct 2021 8:20 PM IST (Updated: 16 Oct 2021 8:20 PM IST)
t-max-icont-min-icon

வீர தீர செயல் புரிந்த சிறுமிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் வீர, தீர செயல்புரிந்த சிறுமிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

விருது

ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு, வீர தீர செயல்புரிந்த 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பாராட்டு பத்திரம், ரூ.1 லட்சம் காசோலை கொண்டது ஆகும்.

தகுதிகள்

இந்த விருது பெற 5 வயதுக்கு மேல், 18 வயதுக்கு உட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது ஒரு வகையில் சிறப்பான தனித்துவமான சாதனை செய்து இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதற்காக ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

இந்த சாதனை புரிந்தவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருது பெற உரிய முன்மொழிவுகளை முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மாவட்ட திட்ட அலுவலர், போலீஸ் துறை மற்றும் குழந்தைகளுக்காக பணிபுரியும் சிறந்த தொண்டு நிறுவனங்கள் ஆகியோரிடம் இருந்து பரிந்துரைக்கலாம்.
தாங்கள் செய்த சாதனைகளை புத்தக வடிக கருத்துரு தயார் செய்து வருகிற 25-ந் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story