கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 16 Oct 2021 8:43 PM IST (Updated: 16 Oct 2021 8:43 PM IST)
t-max-icont-min-icon

பெருங்கலாம்பூண்டி ஊராட்சி தலைவர் பதவி தேர்வில் குலுக்கல் முறையை பின்பற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

விழுப்புரம், 

விக்கிரவாண்டி ஒன்றியம் பெருங்கலாம்பூண்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள பெருந்திட்ட வளாக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மாவீரன் மனைவி மகாலட்சுமி என்பவர் கூறுகையில், மாற்றுத்திறனாளியான நான், பெருங்கலாம்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன். என்னை எதிர்த்து சூரியகாந்தி என்பவரும் போட்டியிட்டார். இதில் நானும், சூரியகாந்தியும் தலா 245 வாக்குகள் சரிசமமாக பெற்றோம். இதனால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் அல்லது குலுக்கல் முறையில் வேட்பாளரை தேர்வு செய்து முடிவு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஆனால் இதனை பரிசீலனை செய்யாமல் சூரியகாந்தி வெற்றி பெற்றதாக அறிவித்தனர். எனவே பெருங்கலாம்பூண்டி ஊராட்சி மன்ற தேர்தல் முடிவை நிறுத்தி வைத்து, சமமான வாக்குகள் பெற்ற மாற்றுத்திறனாளியான எனக்கு நீதி கிடைத்திட வேண்டும் என்றும், மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் அல்லது குலுக்கல் சீட்டு முறையை பின்பற்றி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதை கேட்டறிந்த போலீசார், இதுபற்றி கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினர். அதன் பிறகு அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story