கடமலைக்குண்டு அருகே அ.தி.மு.க. கொடிக்கம்பத்தில் செருப்புகள் ஏற்றியதால் பரபரப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கடமலைக்குண்டு அருகே அ.தி.மு.க. கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை அகற்றிவிட்டு செருப்புகளை ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி:
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே பாலூத்து கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அ.தி.மு.க. கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு கட்சிக் கொடி பறக்கவிடப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலையில் இந்த கொடிக்கம்பத்தில் இருந்த அ.தி.மு.க. கொடி அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக ஒரு ஜோடி செருப்புகள் ஏற்றப்பட்டு இருந்தது. இதை அ.தி.மு.க.வினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் காட்டுத்தீ போல் அருகில் உள்ள கிராமங்களுக்கு பரவியது. இதையடுத்து அங்கு அ.தி.மு.க.வினர் திரண்டு வந்தனர்.
இந்த தகவல் அறிந்ததும் கடமலைக்குண்டு போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார், கொடிக்கம்பத்தின் உச்சியில் தொங்கவிடப்பட்ட செருப்புகளை அகற்றினர். இதையடுத்து அந்த கொடிக்கம்பத்தில் அ.தி.மு.க.வினர் மீண்டும் அ.தி.மு.க. கொடியை ஏற்றினர்.
போலீசார் விசாரணை
கொடிக்கம்பத்தில் அ.தி.மு.க. கொடியை அகற்றிவிட்டு செருப்புகளை ஏற்றியது யார்? என தெரியவில்லை. இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க.வினர் புகார் மனு கொடுத்தனர். அதன்பேரில் கொடிக்கம்பத்தில் செருப்புகளை ஏற்றிய மர்ம நபர்கள் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவை சந்தித்து, கொடிக்கம்பத்தில் செருப்புகள் ஏற்றிய மர்ம நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
இந்த சம்பவத்தால் பாலூத்து பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 50-ம் ஆண்டு பொன்விழாவை கொண்டாட கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வரும் நிலையில் அ.தி.மு.க. கொடிக்கம்பத்தில் செருப்புகள் ஏற்றப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story