மயங்கி விழுந்த தொழிலாளியை போலீஸ் ஜீப்பில் அழைத்து சென்ற இன்ஸ்பெக்டர்
மயங்கி விழுந்த தொழிலாளியை போலீஸ் ஜீப்பில் அழைத்து சென்ற இன்ஸ்பெக்டர்
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே நேற்றுகாலை வாலிபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் கிடந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் உடனடியாக ஆம்புலன்சு அங்கு வரவில்லை. அப்போது திருப்பூர் வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தனசேகரன், போலீஸ்காரர் அஸ்கர் அலி உள்ளிட்டோர் அந்த வழியாக ஜீப்பில் வந்தனர். பொதுமக்கள் கூட்டமாக இருந்ததை தொடர்ந்து ஜீப்பில் இருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் அங்கிருந்தவர்களிடம் என்ன நடந்தது என்று கேட்டார். அப்போது அந்த வாலிபர் வலிப்பு நோயால் மயங்கி கீழே விழுந்து விட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து ஆம்புலன்சு வரும் வரை காத்திருக்க வேண்டாம் என்றும், உடனடியாக வாலிபரை போலீஸ் ஜீப்பில் ஏற்றுமாறும் இன்ஸ்பெக்டர் தனசேகரன் கூறினார். அடுத்த சில நிமிடங்களில் அந்த வாலிபரை புஷ்பா சந்திப்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற இன்ஸ்பெக்டர், வாலிபருக்கு முதலுதவி செய்வதற்கு பரிந்துரை செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், நஞ்சப்பா பள்ளி அருகே மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றியதும் தெரிய வந்தது.
Related Tags :
Next Story