அரசு மருத்துவமனை பெண் டாக்டர் கூடலூருக்கு பணியிட மாற்றம்
அரசு மருத்துவமனை பெண் டாக்டர் கூடலூருக்கு பணியிட மாற்றம்
திருப்பூர்,
கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து அரசு மருத்துவமனை பெண் டாக்டர் கூடலூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கர்ப்பிணிக்கு சிகிச்சையில் அலட்சியம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் காரத்தொழுவை சேர்ந்தவர் மருதமுத்து (வயது 33). தொழிலாளி. இவரது மனைவி ராஜராஜேஸ்வரி (24). இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.
இந்த நிலையில் ராஜ ராஜேஸ்வரி மீண்டும் கர்ப்பமடைந்தார். இதற்காக கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 23-ந்தேதி அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அப்போது ஸ்கேன் எடுக்குமாறு அறிவுறுத்தினர்.
தொடர்ந்து தனியார் மையத்தில் அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது வயிற்றில் உள்ள சிசு உயிரிழந்துவிட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது அங்கு ராஜராஜேஸ்வரிக்கு சிகிச்சையை தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்த டாக்டர் ஜோதிமணி (45) எந்த தகவலும் தெரிவிக்காமலும், அலட்சியமாக நடந்து கொண்டதாகவும் ராஜ ராஜேஸ்வரியின் கணவர் மருதமுத்து குற்றம் சாட்டினார். இது தொடர்பாக புகாரும் எழுந்தது.
பணியிட மாற்றம்
இதன் பின்னர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரூ.35 ஆயிரம் முன்பணம் செலுத்தி, ஒரு மணி நேரத்தில் இறந்தநிலையில் பெண் சிசு வெளியே எடுக்கப்பட்டது. இந்த சிகிச்சையை மேற்கொண்டது டாக்டர் ஜோதிமணி என தெரிய வந்ததால் மருதமுத்து மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்தும், உடுமலை அரசு மருத்துவமனையில் நடந்த அவல நிலை குறித்தும், டாக்டர் ஜோதிமணி நடந்து கொண்ட விதம் குறித்தும் காரத்தொழுவை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் வினீத்திடம் புகார் மனு கொடுத்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் வினீத், இது தொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் பாக்கியலட்சுமி மற்றும் உடுமலை ஆர்.டி.ஓ. கீதா ஆகியோர் விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி கடந்த 5-ந் தேதி இணை இயக்குனர் பாக்கியலட்சுமி உடுமலை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிலையில் ஜோதிமணி தாராபுரத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கிடையே ஜோதிமணி தற்போது நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு அரசுமருத்துவமனைக்கு பணியிட இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story