அ.தி.மு.க. வேட்பாளர் பதவியேற்புக்கு தடைகோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க. வேட்பாளர் பதவியேற்புக்கு தடைகோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Oct 2021 11:21 PM IST (Updated: 16 Oct 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

நெமிலி ஒன்றிய குழுவில் ஒரே ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க.வேட்பாளர் பெற்ற வெற்றிக்கு கள்ள ஓட்டே காரணம் எனவும் அவரது பதவியேற்புக்கு தடை விதிக்கக்கோரியும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெமிலி

நெமிலி ஒன்றிய குழுவில் ஒரே ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க.வேட்பாளர் பெற்ற வெற்றிக்கு கள்ள ஓட்டே காரணம் எனவும் அவரது பதவியேற்புக்கு தடை விதிக்கக்கோரியும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமால்பூர் கீழ்வெண்பாக்கம் ஊராட்சியை உள்ளடக்கிய 16-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க.வை சேர்ந்த சுகுமார், தி.மு.க.வை சேர்ந்த மோகன்குமார் உள்பட 4 பேர் போட்டியிட்டனர். 

கடந்த 9-ம் தேதி வாக்குப்பதிவை தொடர்ந்து 12-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பதிவான மொத்த வாக்குகளில் அ.தி.மு.க.வை சேர்ந்த சுகுமார் 2,079 வாக்குகளும், தி.மு.க.வை சேர்ந்த மோகன்குமார் 2,078 வாக்குகளும் பெற்றனர். 

அ.தி.மு.க.வேட்பாளர் சுகுமார் ஒரே ஓட்டு வித்தியாசத்தில் பெற்றி பெற்றதால் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த தி.மு.க.வினர் வலியுறுத்தினர்.

இரண்டாவது முறையாக வாக்குகள் எண்ணப்பட்டதில் எவ்வித மாற்றமும் இல்லாததால் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த சுகுமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கள்ள ஓட்டு கண்டுபிடிப்பு

இதனை தொடர்ந்து ஒவ்வொரு வார்டாக வாக்காளர் பட்டியலை தி.மு.க.வினர் ஆய்வு செய்ததில் திருமால்பூரை சேர்ந்த ஒரு பெண் வாக்காளரின் பெயர் 4-வது மற்றும் 7-வது வார்டு என 2 வார்டுகளில் பதிவாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனால் தி.மு.க.வினர் தீவிர கள ஆய்வில் இறங்கியபோது 4-வது வார்டில் ஓட்டுப்போட்ட சம்மந்தப்பட்ட பெண் வாக்காளர், 7-வார்டில் வேறொரு நபர் மூலம் கள்ள ஓட்டு போட்டதை கண்டுபிடித்தனர்.

மேலும் தபால் வாக்குகளும் முறையாக கணக்கிடவில்லை என ஆவேசம் அடைந்த தி.மு.க.வினர் மற்றும் அந்த கட்சியின் வேட்பாளர் மோகன்குமாரின் ஆதரவாளர்கள் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திரண்டனர்.

அவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரை சந்தித்து கள்ள ஓட்டு போட்ட அ.தி.மு.க.வினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். 

மேலும், அதிமுகவை சேர்ந்த சுகுமார் பதவியேற்புக்கு தடை விதிக்கக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story