அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க ரூ.5 கோடியில் திட்டம்


அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க ரூ.5 கோடியில் திட்டம்
x
தினத்தந்தி 16 Oct 2021 11:22 PM IST (Updated: 16 Oct 2021 11:22 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாடவிதிகளில் மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க ரூ.5 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாடவிதிகளில் மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க ரூ.5 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. அதன் காரணமாக வேங்கிக்கால், சேரியந்தல், நொச்சிமலை, கீழ்நாத்தூர் ஆகிய 4 ஏரிகளில் தண்ணீர் நிரம்பி உபரி வெளியேறி நீர்வரத்து கால்வாய்களில் செல்லாமல் குடியிருப்பு பகுதியில் தேங்கி நின்றது.

ஏரி நீர் நீர்வரத்து கால்வாய்களில் செல்லவும், குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய நீரை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு  வேங்கிக்கால் ஏரி, அவலூர்பேட்டை சாலை, கீழ்நாத்தூர் ஏரி செல்லும் கால்வாய், திருவண்ணாமலை-சென்னை சாலை, நொச்சிமலை ஏரி அருகே உள்பட பல்வேறு பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது அவர், ஏரி நீர் செல்லும் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் உடனடியாக சரி செய்யவும், அந்த பணிகளை விரைந்து முடிக்கவும், இனிமேல் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் செல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறையினருக்கு உத்தரவிட்டார்.

ரூ.5 கோடியில் திட்டம்

ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது: - 

தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் அதிக மழை பெய்யும். மழையினால் ஏற்படும் சேதங்களை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ள சேதம் ஏற்படாத வகையில் மாவட்டத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக திருவண்ணாமலை நகரை சுற்றியுள்ள 4 ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது. 

ஏரி நீர்செல்லும் கால்வாய்கள், சிறு பாலங்களை தூர்வாரி குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் செல்லாதபடி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஒருவாரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

அருணாசலேஸ்வரர் கோவில் 4 மாடவீதிகளில் மழைநீர் தேங்கி நிற்காமல் இருப்பதற்காக ரூ.5 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மாடவீதிகளில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு கட்டர் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படும்.

இந்த பணிகள் ஓராண்டுகள் நிறைவேற்றப்பட்டு, அடுத்த ஆண்டு மழைநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார். 

ஆய்வின் போது திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பி.முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்.எல்.ஏ., முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், ஊராட்சிகள் துறை உதவி இயக்குனர் லட்சுமிநரசிம்மன், திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story