குளமங்கலத்தில் யாருமே வராத சந்தையில் பாயாசம் விற்கும் முதியவர் தேடிவரும் வாடிக்கையாளர்கள்


குளமங்கலத்தில்  யாருமே வராத சந்தையில் பாயாசம் விற்கும் முதியவர் தேடிவரும் வாடிக்கையாளர்கள்
x
தினத்தந்தி 16 Oct 2021 11:31 PM IST (Updated: 16 Oct 2021 11:31 PM IST)
t-max-icont-min-icon

யாருமே வராத சந்தையில் முதியவர் பாயாசம் விற்கிறார்.

கீரமங்கலம்:
சுமார் 30 வருடங்களுக்கு முன்பு வரை ஒவ்வொரு ஊரிலும் வாரச்சந்தைகள் நடத்தப்படுவது வழக்கம். வாரச்சந்தைகளில் வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் வாங்கி செல்வார்கள். அதாவது இன்றைய பல்பொருள் அங்காடி போல வாரச்சந்தைகள் இருந்துள்ளது. ஆனால் பின்னர் ஊருக்கு ஊர் கடைகள் வரத் தொடங்கியதாலும் பல்பொருள் அங்காடிகள் வந்த பிறகு வாரச்சந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக கலையிழந்து தற்போது பழைய வாரச்சந்தைகள் காணாமல் போய்விட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தில் முன்பு சனிக்கிழமைகள் தோறும் வாரச்சந்தைகள் கூடியுள்ளது. இங்கும் காய்கறிகள் முதல் பாசிமணி, மீன் விற்பனை என ஏராளமான கடைகள் நடந்துள்ளது. மீன் கடைகள், காய்கறிக் கடைகளுக்காக சிமெண்டு சீட்டுகளால் கொட்டகைகளும் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு பொருட்கள் வாங்க குளமங்கலம், பனங்குளம், திருநாளூர் உள்பட பல கிராம மக்களும் வந்து சென்றுள்ளனர். ஆனால் காலப்போக்கில் ஒவ்வொரு கடையாக குறைந்து தற்போது ஒரே ஒரு மீன் கடை மட்டும் உள்ளது. ஆனால் ஒருவர் மட்டும் பல ஆண்டுகளாக இப்போது வரை பாயாசக் கடை வைத்திருக்கிறார். பாயாசக்கடை வைத்திருக்கும் சின்னத்துரை கூறுகையில், 40 வருடங்களுக்கு மேலாக டீ கடை நடத்தி வருகிறேன். ஆனால் சனிக்கிழமை சந்தையில் பாயாசக் கடை போடுவேன். சந்தைக்கு வரும் மக்களும் அவர்களின் குழந்தைகளும் எனது வாடிக்கையாளர்கள். காலப்போக்கில் எந்தக்கடையும் வருவதில்லை. ஆனால் நான் பாயாசக் கடை தொடர்ந்து நடத்தி வருகிறேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் எனக்கான வாடிக்கையாளர்கள் வருவதால் கடையை நிறுத்தவில்லை. தொடக்கத்தில் ஒரு கிளாஸ் 15 பைசாவுக்கு விற்றேன். இப்ப சின்ன கிளாஸ் ரூ.5, பெரிய கிளாஸ் ரூ.10-க்கு விற்கிறேன். ஒரு நாளைக்கு ரூ.200 வருமானம் கிடைக்கும் என்றார். 

Next Story