பணகுடி அனுமன் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது


பணகுடி அனுமன் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது
x
தினத்தந்தி 17 Oct 2021 12:30 AM IST (Updated: 17 Oct 2021 12:30 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பணகுடி அனுமன் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. குத்திரபாஞ்சான் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

பணகுடி:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பணகுடி அனுமன் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. குத்திரபாஞ்சான் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

அனுமன் நதியில் வெள்ளம்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரையிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பணகுடி குத்திரபாஞ்சான் அருவி, கன்னிமாறன்தோப்பு ஓடை, உலக்கை அருவி ஓடை போன்றவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அனுமன் நதியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இதனால் பணகுடி நகரின் நடுவில் மெயின் ரோடு பாலத்தை தொட்டவாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட மரக்கட்டைகள், புதர் செடிகள் போன்றவை பணகுடி பாலத்தின் அடியில் சிக்கியதால், தண்ணீர் செல்வதில் இடையூறு ஏற்பட்டு, அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுக்குள் புகுந்தது.

குத்திரபாஞ்சான் அருவி

மேலும் பணகுடி மெயின் ரோடு பாலத்தை மூழ்கடித்தவாறு வெள்ளம் சென்றது. இதையடுத்து அப்பகுதி மக்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் விரைந்து சென்று, பாலத்தில் சிக்கிய கட்டைகள், புதர் செடிகளை அப்புறப்படுத்தினர். இதனால் தண்ணீர் இடையூறின்றி பாலத்தின் வழியாக பாய்ந்தோடியது.

வெள்ளப்பெருக்கு காரணமாக பணகுடி குத்திரபாஞ்சான் அருவிக்கு செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் அருகில் உள்ள கன்னிமாறன் தோப்பு ஓடையில் சுற்றுலா பயணிகள் குளித்து சென்றனர்.

Next Story