11 புதிய மருத்துவக்கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை
முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளபடி புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக்கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
விருதுநகர்,
முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளபடி புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக்கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆய்வு
தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று விருதுநகரில் புதிய மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ள நிலையில் கல்லூரி உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இந்திய மருத்துவ குழுமம் புதிதாக கட்டப்பட்டுள்ள விருதுநகர் உள்ளிட்ட 3 மருத்துவக்கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் தலா 150 மாணவர் சேர்க்கைக்கும், 4 மருத்துவக்கல்லூரிகளில் தலா 100 மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி அளித்துள்ளது. இதில் அரியலூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திண்டுக்கல் ஆகிய 4 மருத்துவக்கல்லூரிகளிலும் ஒரு சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில் இந்திய மருத்துவ குழுமம் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கவில்லை. எனினும் இந்த மருத்துவக்கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாணவர் சேர்க்கை
முதல்-அமைச்சர் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக்கல்லூரிகளிலும் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதன்பேரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் இதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு உள்ளோம், எனவே உறுதியாக 11 மருத்துவக்கல்லூரிகளிலும் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்காக இந்திய மருத்துவக்குழுமத்தின் அனுமதி பெறப்படும். தற்போதைய நிலையில் கோவை மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 100 மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக்குழுமம் அனுமதி அளித்துள்ளது. மேலும் 100 மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள 3 மருத்துவக்கல்லூரிகளில் 150 மாணவர்களை சேர்க்க அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விருதுநகர் மருத்துவக்கல்லூரியில் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக கலெக்டர், மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளையும பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.
மேலும் இந்த மருத்துவக்கல்லூரி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ளதால் விபத்து சிகிச்சை பிரிவை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இந்த மருத்துவக்கல்லூரிக்கு மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியை இணைப்பு ஆஸ்பத்திரியாக காட்டித்தான் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. எனினும் மருத்துவக் கல்லூரிக்கான இணைப்பு ஆஸ்பத்திரி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக சொல்லப்பட்டாலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த ஆஸ்பத்திரி தயாராகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இட ஒதுக்கீடு
மருத்துவக்கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 இட ஒதுக்கீடு நடப்பு கல்வி ஆண்டிலும் அமல்படுத்தப்பட உள்ள போதிலும் எத்தனை மாணவர்களுக்கு இந்த இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கும் என்பது தற்போது உறுதியாக சொல்ல முடியாது.
ஏனெனில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அனுமதி பெறப்பட்டபின் தான் உறுதியாக அரசு பள்ளி மாணவர்களுக்கு எத்தனை பேருக்கு இடம் கிடைக்கும் என்று தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கலெக்டர் மேகநாத ரெட்டி, மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி மற்றும் மாவட்ட அரசு ஆஸ்பத்திரி நிர்வாக அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story