காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்
காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்கப்பட்டார்.
ஜீயபுரம்:
ஆற்றில் குதித்த பெண்
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே அல்லூர் மேலபச்சேரி பகுதியை சேர்ந்தவர் தங்கராசு (வயது 60). இவருடைய மகள் துளசிமணி (35). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில் நேற்று காலை துளசிமணி தனது வீட்டில் வேலைகளை செய்யாமல் இருந்ததாகவும், இதனால் அவரை அவருடைய தந்தை திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், வீட்டை விட்டு வெளியேறினார்.
பின்னர் அல்லூர் பஸ் நிலைய பகுதிக்கு வந்த துளசிமணி, வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்வதற்காக அருகில் உள்ள காவிரி ஆற்றில் குதித்தார். ஆனால் அந்த பகுதியில் அவர் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் செல்லவில்லை. இதனால், ஆழமான பகுதியை தேடி அவர் ஆற்றின் மையபகுதிக்கு தண்ணீரில் நடந்து சென்றார். அப்போது காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தது.
பத்திரமாக மீட்பு
இதை அந்த பகுதியில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுபற்றி, ஜீயபுரம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய அதிகாரி மெல்கியூ ராஜா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.பின்னர் காவிரி ஆற்றில் கயிறுகட்டி குதித்து, ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று, அங்கிருந்த துளசிமணியை மீட்டனர். சுமார் அரை மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அவர் பத்திரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டார். இதையடுத்து ஜீயபுரம் போலீசார் மூலம் அவர், அவருடைய தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story