மாவட்ட பகுதிகளில் பலத்த மழை
திருச்சி மாவட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
திருச்சி:
திருச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் மாலையில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலை 4 மணியில் மழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் திருச்சி நகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். இரவில் குளிர்ந்த சூழ்நிலை ஏற்பட்டது. இரவில் தூறலாக மழை பெய்தது.
இதேபோல் துவரங்குறிச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று பிற்பகல் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை உருவானது. இதற்கிடையே துவரங்குறிச்சி கடைவீதி பகுதியில் மழைநீர் வெளியேற வழியின்றி தண்ணீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதேபோல் மருங்காபுரி, மணப்பாறை தாலுகாவில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
முசிறி, தா.பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் உள்பட பலரும் அவதி அடைந்தனர். நேற்று மாலை முசிறி சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் தா.பேட்டை பகுதியில் தூறலாக மழை பெய்தது. மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெப்பம் தணிந்து இதமான காற்று வீசியதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
Related Tags :
Next Story