ஆற்றுவெள்ளத்தில் மூழ்கி மாணவன் சாவு
குமரி மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழையால் ஆறுகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்று வெள்ளத்தில் மூழ்கி மாணவன் பரிதாபமாக இறந்தார். காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளியை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழையால் ஆறுகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்று வெள்ளத்தில் மூழ்கி மாணவன் பரிதாபமாக இறந்தார். காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளியை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
விடிய, விடிய கனமழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. விடிந்த பிறகும் மழை நின்றபாடில்லை. சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ஆங்காங்கே மரங்களும் சாய்ந்து விழுந்தன. மாவட்டம் முழுவதும் இதே நிலை நீடித்ததால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தாழ்வான குடியிருப்புகளையும் மழை வெள்ளம் சூழ்ந்தது.
நீர்திறப்பு அதிகரிப்பு
ஏற்கனவே பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு தண்ணீர் வரத்து இருந்தது. நேற்றுமுன்தினம் இரவு பெய்த தொடர் மழையால் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தது.
பேச்சிப்பாறை அணைக்கு நேற்று மதியம் 1 மணி நிலவரப்படி வினாடிக்கு 15 ஆயிரத்து 919 கனஅடி நீர்வரத்து வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரத்து 209 கனஅடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டது. பெஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரத்து 104 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரத்து 544 தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டன. ஒரே நேரத்தில் 2 அணைகளில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குழித்துறை தாமிரபரணி ஆறு, பரளியாறு, கோதையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றங்கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள சில இடங்களில் மழை வெள்ளம் புகுந்தது.
திற்பரப்பு அருவியில் காட்டாற்று வெள்ளம்
மேலும் கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் திற்பரப்பில் அருவியே தெரியாத அளவுக்கு காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதை காணமுடிந்தது.
ஆறுகள், கால்வாய்களில் இருபுறமும் கரைபுரண்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் கால்வாய்களில் இருந்து தண்ணீர் வெளியேறி விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் தெரிசனங்கோப்பு பகுதியில் உள்ள விளைநிலைங்களில் பயிரிப்பட்டிருந்த பயிர்களே தெரியாத அளவுக்கு தண்ணீர் அந்த பகுதியை சூழ்ந்தது.
பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
மழை வெள்ளத்தால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் பல இடங்களில் தண்ணீரில் மூழ்கின. வாழை, ரப்பர் தோட்டங்களிலும் சில இடங்களில் மழை வெள்ளம் புகுந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பரளியாற்றின் குறுக்கே மலவிளை பகுதியில் உள்ள தரைமட்ட பாலம் உள்ளது. இந்த பாலத்தை மழை வெள்ளம் மூழ்கடித்ததால் அந்த பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் தவித்தனர்.
ஆற்றில் மூழ்கி மாணவன் சாவு
பலத்த மழைக்கு இடையே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாணவன் பலியான சோக சம்பவமும் நடந்தது. அதாவது, குறும்பனை 39-வது அன்பியம் என்ற இடத்தை சேர்ந்தவர் ஆண்டனி என்ற ஜெம்மி. இவருடைய மகன் நிஷான் (வயது 17), குளச்சலில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
நிஷானின் உறவினர் வீடு கடியப்பட்டணத்தில் உள்ளது. அங்கு நேற்று வந்த அவர் வள்ளியாற்றில் தண்ணீர் செல்வதை பார்த்து குளிக்க விரும்பினார். பின்னர் தன்னுடைய நண்பர்கள் 3 பேரையும் வரவழைத்து ஆற்றில் குளிக்க உற்சாகமாக புறப்பட்டார். கடியப்பட்டணம் தடுப்பணை பகுதியில் குளிக்க முற்பட்ட போது நிஷான் ஆற்றுக்குள் தவறி விழுந்து விட்டார். இதனால் ஆற்று வெள்ளம் அவரை அடித்துச் சென்றது. இதனால் நண்பர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அலறினர்.
உடனே மீனவர்கள் ஆற்றில் இறங்கி தேடினார்கள். பின்னர் தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நிஷாந்த் பிணமாக மீட்கப்பட்டடார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
தொழிலாளி கதி என்ன?
மேலும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு தொழிலாளி ஒருவர் மாயமானார். அதாவது மேலவாழையத்துவயல் பகுதியை சேர்ந்த சித்திரைவேல் (39) என்பவர் மாறாமலை எஸ்டேட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
வேலை முடிந்ததும் இவர் காளிகேசத்தில் இருந்து கீரிப்பாறை நோக்கி நண்பர் ஒருவருடன் நடந்து வந்தார். அங்குள்ள தரைப்பாலத்தை கடந்து சென்ற போது திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அதில் சித்திரைவேல் சிக்கி விட்டார். ஆனால் அவருடைய நண்பர் தப்பி விட்டார்.
காட்டாற்று வெள்ளத்தில் அவருடைய நண்பரின் கண் எதிரேயே சித்திரைவேல் அடித்து செல்லப்பட்டார். இதனை கேள்விபட்ட தீயணைப்பு படையினர் விரைந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால எந்தவொரு தகவலும் இல்லை. இதனால் அவருடைய கதி என்னவென்று தெரியாததால் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.
Related Tags :
Next Story