மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை


மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 17 Oct 2021 3:33 AM IST (Updated: 17 Oct 2021 3:33 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்்தில் பலத்த மழை பெய்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீன் கிடைக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

குளச்சல்:
குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீன் கிடைக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். 
பலத்த மழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்ேபாது மழை பெய்து வருகிறது. குளச்சல் பகுதியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் கடலில் ராட்சத அலைகள் எழுந்து கரையை ேநாக்கி சீறி வந்தன. இதனால், கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் மூழ்கினர்.
குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட கட்டுமரம் மற்றும் வள்ளங்களும் மீன் பிடித்து வருகின்றன. விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று பல நாட்கள் தங்கியிருந்து மீன்பிடி வருவார்கள். கட்டுமர மீனவர்கள் அதிகாலையில் கடலுக்கு சென்றுவிட்டு மதியம் கரை திரும்புவார்கள்.
மீன்பிடிக்க செல்லவில்லை
இந்தநிலையில், நேற்று குளச்சல் பகுதியில் விடிய, விடிய காற்றுடன் மழை பெய்ததால் அதிகாலையில் கடலுக்கு செல்லும் வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் படகுகளை தொடர்ந்து செலுத்த முடியாமல் அவசரமாக பாதியிலேயே கரை திரும்பினர்.
அவர்கள் தங்களது விசைப்படகுகளை மீன்பிடித்துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இதுபோல், கடலுக்கு செல்லாத கட்டுமரங்கள் மேடான மணற்பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. 
இதேபோல கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி
துறைமுகத்திலும் சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் அங்குள்ள மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. மேலும், ஆரோக்கியபுரம், வாவத்துறை உள்பட மாவட்டம் முழுவதும் வள்ளங்கள், கட்டுமரங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 
 
பொதுமக்கள் ஏமாற்றம்
மீனவர்கள் கடலுக்கு ெசல்லாததால் நேற்று மீன் வரத்து இல்லாமல் இருந்தது. இதன்காரணமாக மீன் வாங்க வந்த வியாபாரிகளும், பொதுமக்களும் மீன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Next Story