மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.3¼ லட்சம் திருட்டு


மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.3¼ லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 17 Oct 2021 5:42 AM IST (Updated: 17 Oct 2021 5:42 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.3¼ லட்சத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூர் கிராமத்தை சேர்ந்த சைக்கிள் பழுது நீக்கும் கடை உரிமையாளர் முகமதுஅலி (வயது44). இவர் புதிதாக நிலம் வாங்குவதற்காக திட்டமிட்டிருந்தார். அதற்காக தனது வீட்டில் இருந்த 11 பவுன் நகைகளை நேற்று மதியம் கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள ஒரு நகைகடைக்கு கொண்டு சென்றார். அங்கு நகைகளை விற்பனை செய்து விட்டு ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்தை பெற்றார். அந்த பணத்தை ஒரு மஞ்சள் துணிப்பையில் வைத்தார். பின்னர் தனது மோட்டார் சைக்கிளின் இருக்கையின் கீழ் பணப்பையை வைத்து பூட்டினார்.

இந்த நிலையில் தனது மோட்டார் சைக்கிளில் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அருகே உள்ள ஒரு குளிர்பானக்கடைக்கு முகமது அலி சென்றார். அங்கு குளிர்பானம் குடித்து விட்டு மோட்டார் சைக்கிளின் இருக்கையை திறந்து பார்த்தபோது அதில் இருந்த ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் மாயமாகி இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story