சார்ஜா, துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் சிக்கியது - 3 பேர் கைது


சார்ஜா, துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் சிக்கியது - 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 Oct 2021 5:57 AM IST (Updated: 17 Oct 2021 5:57 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் சார்ஜா, துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சார்ஜா மற்றும் துபாயில் இருந்து விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன் பேரில் நேற்று துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து வந்து இறங்கிய பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது விமானத்தில் இருந்து வந்து இறங்கிய பயணிகள் சுங்க இலாகா அதிகாரிகளில் பார்வையில் இருந்து நைசாக நழுவி 5 பேர் வெளியே செல்ல முயன்றனா். இந்த நிலையில், இவர்கள் 5 பேர் மீதும் சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகம் ஏற்படவே, அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில், 5 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்கள் கொண்டு வந்த உடமைகளை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.

அதில் கடத்தல் பொருட்கள் எதுவும் சிக்காததால், அவர்களை தனி அறைக்கு அழைத்து ஆடைகளை முழுவதுமாக சோதித்தனர். அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பதை கண்டு பிடித்தனா்.

இதையடுத்து அவர்கள் பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 16 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 550 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக 3 பேரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் தங்கத்தை யாருக்காக கடத்தி வந்தனர்? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். நேற்று ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் ரூ.1¼ கோடி மதிப்பிலான தங்கம் கைப்பற்றப்பட்டதாக சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story