கோவில் நகைகளை உருக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 26-ந் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்


கோவில் நகைகளை உருக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 26-ந் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2021 6:47 PM IST (Updated: 17 Oct 2021 6:47 PM IST)
t-max-icont-min-icon

கோவில் நகைகளை உருக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 26-ந் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

வேலூர்

கோவில் நகைகளை உருக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 26-ந் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

பிரசார பயணம்

இந்து கோவில்களில் உள்ள நகைகளை உருக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் பிரசார பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நேற்று வேலூரில் பிரசார பயணம் நடந்தது. கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து செல்லியம்மன் கோவில் வரை ஊர்வலமாக சென்றனர். செல்லும் வழியில் பொதுமக்களிடம் கோரிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி, கோஷங்களை எழுப்பினர்.

இந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணியின் மாநில தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பின்னர் அவர்கள் செல்லியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனிடம் கோரிக்கை மனுவை அளித்து முறையிட்டனர். இதையடுத்து புதிய பஸ் நிலையம் சென்று பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர். கோட்ட தலைவர் மகேஷ், பொருளாளர் பாஸ்கரன், ஒருங்கிணைப்பாளர் ஆதிமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து மாநில தலைவர் சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அதிகாரம் இல்லை

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்து கோவிலுக்கு சொந்தமான நகைகள் உருக்கப்படும் என அறிவித்துள்ளார். இதை கண்டித்தும், மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாகவும் சென்னை, வேலூரில் பிரசார யாத்திரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி திருச்சி, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் பிரசார பயணம் மேற்கொள்ளப்படும். சாமி நகைகளை உருக்க அரசுக்கு அதிகாரம் இல்லை. இதுகுறித்து ஐகோர்ட்டு வழிகாட்டுதல்கள் தெரிவித்துள்ளது.

 கோவில்களில் உள்ள நகைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் அரசு கோவில் நகை குறித்த தகவல் இல்லை. நன்கொடை குறித்த கணக்கும் இல்லை. தற்போது ஒரேநாளில் கோவில் நகை குறித்து கணக்கெடுக்க வேண்டும் என அரசு கூறுகிறது. 
26-ந் தேதி ஆர்ப்பாட்டம்

ஏன் இந்த அவசரம். இதில் ஊழல் நடைபெற வாய்ப்பு உள்ளது. எந்தெந்த கோவில்களில் நகை, பணம் எவ்வளவு வங்கியில் வைக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். கோவில் நகைகளை உருக்குவதை கண்டித்தும், இந்த திட்டத்தை கைவிடக்கோரியும் தமிழகம் முழுவதும் வருகிற 26-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story