வேறு மாவட்ட பெயர்கள் எழுதப்பட்ட அரசு பஸ்கள்


வேறு மாவட்ட பெயர்கள் எழுதப்பட்ட அரசு பஸ்கள்
x
தினத்தந்தி 17 Oct 2021 6:56 PM IST (Updated: 17 Oct 2021 6:56 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் வேறு மாவட்ட பெயர்களுடன் இயங்கும் பஸ்களால் பயணிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.


திருப்பூர்
திருப்பூரில் வேறு மாவட்ட பெயர்களுடன் இயங்கும் பஸ்களால் பயணிகள் குழப்பம் அடைந்துள்ளனர். 
அரசு பஸ் 
திருப்பூரில் லட்சக்கணக்கான தொழிலாளா்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பலரும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க திருப்பூருக்கு வந்து செல்வார்கள். அல்லது அவர்களது பகுதிகளில் உள்ள பெரிய சந்தைகள் மற்றும் கடைகளுக்கு செல்வார்கள். இதனால் மற்ற நாட்களை விட ஞாயிற்றுக்கிழமை பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். 
இதிலும் திருப்பூர் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழியும். திருப்பூர் புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையம், யுனிவர்சல் தியேட்டர் பகுதி, கோவில்வழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிமாவட்டங்களுக்கும் பஸ்கள் சென்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நேற்று திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் அவினாசி பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. 
பயணிகள் குழப்பம் 
இதற்கிடையே அந்த பஸ்சின் பின்புறம் ஈரோடு, கலெக்டர் அலுவலகம், திண்டல், மேட்டுக்கடை, புங்கம்பாடி, பெருந்துறை என வேறு மாவட்டத்தின் பெயர்கள் இருந்தது. இந்த பஸ் பழைய பஸ் நிலையம் வந்ததும் பயணிகள் பலரும் குழப்பம் அடைந்தனர். அந்த பஸ் ஈரோடு செல்லும் பஸ்சா அல்லது அவினாசி செல்லும் பஸ்சா? என பலருக்கும் குழப்பம் ஏற்பட்டது.
இந்த பஸ்சில் பெயர்பலகை மாற்றி வைக்கப்பட்டதா அல்லது ஈரோட்டிற்கு இயங்கும் அரசு பஸ் அவசர தேவைக்காக அவினாசிக்கு பயன்படுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை. இருப்பினும் அவசரத்திற்காக அரசு பஸ் பயன்படுத்தினாலும் அந்த பஸ்களின் பின்புறம் இருக்கிற வேறு மாவட்ட பெயர்களை மறைத்து வைத்து பயன்படுத்த வேண்டும். பயணிகள் குழம்பாத வகையில் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
-


Next Story