திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழாவில் தேரோட்டம் நடத்தக்கோரி சிவனடியார்கள் ஊர்வலம்


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழாவில் தேரோட்டம் நடத்தக்கோரி சிவனடியார்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 17 Oct 2021 9:16 PM IST (Updated: 17 Oct 2021 9:16 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழாவில் சாமி வீதிஉலா, தேரோட்டம் நடத்தக்கோரி சிவனடியார்கள் ஊர்வலமாக சென்றனர்.

திருவண்ணாமலை 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழாவில் சாமி வீதிஉலா, தேரோட்டம் நடத்தக்கோரி சிவனடியார்கள் ஊர்வலமாக சென்றனர்.

 சிவனடியார்கள் ஊர்வலம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா ஆண்டு தோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். 

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு தீபத்திருவிழாவில் தேரோட்டம், சாமி வீதிஉலா ரத்து செய்யப்பட்டது. 
இந்த ஆண்டு தீபத்திருவிழா அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 19-ந்தேதி அதிகாலை 4 மணி அளவில் பரணி தீபமும், மாலையில் 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இந்த நிலையில் உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில் தீபத்திருவிழாவில் சாமி வீதிஉலா, தேரோட்டம் நடத்தக்கோரி நேற்று கவன ஈர்ப்பு ஊர்வலம் நடத்தினர்.

 அமைச்சரிடம் கோரிக்கை மனு 

ஊர்வலம் ராஜகோபுரம் முன்பு இருந்து புறப்பட்டு மாடவீதியை வலம் வந்து மீண்டும் ராஜகோபுரத்தை வந்தடைந்தது. 
இதில் ஏராளமான சிவனடியார்கள் திருமுறை ஓதியும், கயிலாய இசையுடனும் மாட வீதியை வலம் வந்து தீபத்திருவிழா வழக்கம் போல் நடைபெற வேண்டும் என்று அண்ணாமலையாரை வேண்டி கொண்டனர். 

தீபத்திருவிழா தேரோட்டம், சாமி வீதிஉலாவுக்கு அனுமதி அளித்திட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கமலா பீடம் நிறுவனர் பொறியாளர் சீனுவாசன் தலைமையில் சிவனடியார்கள், அமைச்சர் எ.வ.வேலுவை நேரில் சந்தித்து அளித்தனர். 
அப்போது உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் அறக்கட்டளையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலையார் அருள் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story